‘சும்மா விளையாட்டா சொன்னேன்’ ராகுல் குறித்து கூறியதை சீரியசாக கருத வேண்டாம்: ரஷ்ய செஸ் வீரர் விளக்கம்

புதுடெல்லி: மக்களவை தேர்தல் பிரசாரத்திற்கு நடுவே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது செல்போனில் செஸ் விளையாடும் வீடியோ ஒன்றை காங்கிரஸ் கட்சி சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தது.

அதில், ராகுல் காந்தி, அனைத்து இந்திய அரசியல் தலைவர்களை விட தான் ஒரு சிறந்த செஸ் வீரர் என்றும், தனக்கு பிடித்த செஸ் வீரர் ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் உலகின் நம்பர் 1 வீரர் கேரி காஸ்பரோவ் என்றும் கூறியிருந்தார். மேலும், செஸ், அரசியலுக்கு இடையேயான ஒற்றுமை குறித்தும் ராகுல் பேசியிருந்தார்.
இதற்கு டிவிட்டர் பயனர் ஒருவர், ‘காஸ்பரோவ், விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் சீக்கிரமே ஓய்வு பெற்று விட்டதால் நிம்மதி அடைந்திருப்பார்கள். ஏனென்றால், சமகால தலைசிறந்த செஸ் வீரரை அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை பாருங்கள்’ என கிண்டல் செய்திருந்தார்.

இதற்கு கேரி காஸ்பரோவ், ‘முதலில் ரேபரேலியில் வெல்லட்டும். பிறகு முன்னணி வீரர்களுடன் மோதலாம்’ என பதிலளித்தார். ராகுலை விமர்சிக்கும் வகையில் இருந்ததால் இதை பாஜவை சேர்ந்த சிலர் டிவிட்டரில் வைரலாக்கினர்.

அதைத் தொடர்ந்து காஸ்பரோவ் அளித்த விளக்க டிவிட்டில், ‘‘எனது சிறிய நகைச்சுவை, இந்திய அரசியலில் சீரியசாகவும், நிபுணத்துவமாகவும் பார்க்கப்படாது என நம்புகிறேன். ஏற்கனவே நான் கூறியதை போல, ‘ஆயிரம் கண்கள் கொண்ட அரக்கனை போன்ற நான்’ எனது விருப்பமான விளையாட்டில் அரசியல் தலைவர்கள் மூக்கை நுழைப்பது வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது’ என கூறி உள்ளார். ரஷ்ய அதிபர் விளாமிர் புடினை கடுமையாக விமர்சித்ததன் காரணமாக, சொந்த நாட்டில் இருந்து வெளியேறி தற்போது குரோசியாவில் காஸ்பரோவ் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி வழங்கப்படும்: மக்கள் நல்வாழ்வுத்துறை

கனகம்மாசத்திரம் சாலையில் வேரோடு பெயர்ந்து விழுந்த நூறாண்டு புளியமரம்: உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்

திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் செய்த 750 பக்தர்களுக்கு மஞ்சப்பை