ராசிபுரம், புதுகையில் வெறிநாய் கடித்து குழந்தைகள் உட்பட 15 பேர் படுகாயம்

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த வடுகம் ஆதிதிராவிடர் காலனி சாலையில், நேற்று காலை அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வெறிநாய் ஒன்று விளையாடிக்கொண்டு இருந்த தேஜேஸ்வரன் (5), பிரியதர்ஷினி (11), யாகவீர் (5) ஆகிய 3 குழந்தைகளை கடித்துள்ளது. குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு வந்த பெற்றோர்கள், வெறிநாய் கடித்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அந்த நாயை கல்லால் தாக்கி விரட்டியடித்தனர். பின்னர், நாய் கடித்ததில் படுகாயமடைந்த 3 குழந்தைகளையும் உடனடியாக மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

மருத்துவர்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுள்ளனர். நாய் கடித்ததில் முகத்தில் படுகாயம் அடைந்த தேஜேஸ்வரன் என்ற சிறுவனுக்கு, தையல் போட்டு உள்ளனர். இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி ஊராட்சி சொக்கநாதபட்டி கிராமத்தில் பொதுமக்களை ஒரு தெருநாய் அடுத்தடுத்து கடித்ததில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 12 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related posts

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்