தைத்திருநாளை முன்னிட்டு 12,911 அர்ச்சகர், பணியாளருக்கு புத்தாடைகள், சீருடைகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: பொங்கலை முன்னிட்டு 12,911 அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கப்படுகிறது என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோயிலில் தைத்திருநாளை முன்னிட்டு சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 74 கோயில்களின் 128 அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகளுக்கு புத்தாடைகளையும், 339 பணியாளர்களுக்கு சீருடைகளையும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

இந்தாண்டு 12,911 அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்குகின்ற நிகழ்ச்சியை காளிகாம்பாள் கோயிலில் தொடங்கி வைத்துள்ளோம். இதற்காக ரூ.1.49 கோடி செலவிடப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரலாறு காணாத அளவிற்கு பக்தர்கள் வருவதால் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து முதல்வர் நேரடியாக தொடர்பு கொண்டு, பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பும் தரிசனத்திற்குண்டான ஏற்பாடுகளையும் நல்க வலியுறுத்தி இருக்கிறார்.

எங்களையும் இதுதொடர்பாக கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டிருக்கிறார். சபரிமலையில் பக்தர்கள் நலனை கருதி கேரளா அரசாங்கம் எடுத்து வருகின்ற நடவடிக்கைகள் துரிதமாகத்தான் இருக்கிறது. வருங்காலங்களில் இதுபோன்ற கூட்ட நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்கும் கேரள அரசு பல்வேறு திட்டங்களையும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. அவற்றிற்கு தமிழ்நாடு அரசும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.53,520க்கு விற்பனை

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் செங்கொடி ராணுவ கூட்டு பயிற்சியில் இந்திய விமானப்படையின் ரஃபேல் போர்விமானம் பங்கேற்பு..!!