கன்னியாகுமரி கடற்கரையில் பகவதியம்மனுக்கு ஆறாட்டு


கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி இன்று காலை திரிவேணி சங்கம கடற்பகுதியில் அம்மனுக்கு ஆறாட்டு நடைபெற்றது. இதையடுத்து இன்று இரவில் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணி முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை, சிறப்பு அன்னதானம், இந்து சமய சொற்பொழிவு, பாட்டு கச்சேரி, வாகன பவனி, சப்பர ஊர்வலம் ஆகியவை நடந்து வந்தன. அதைத்தொடர்ந்து 9ம் நாள் விழாவான நேற்று காலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. மேள தாளம் முழங்க கோயிலில் இருந்து தேர் புறப்பட்டு ரதவீதியை சுற்றி வந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். 10ம் திருவிழாவான இன்று (23ம் தேதி) காலை 6 மணியளவில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் அம்மனுக்கு ஆறாட்டு நடைபெற்றது. இதையடுத்து ஆண்டில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டுமே திறக்கப்படும் கோயில் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியே அம்மன் கோயிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர். இதையடுத்து அம்மனுக்கு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து இன்று இரவு 9 மணிக்கு தெப்பத் திருவிழா நடக்கிறது. இத்துடன் வைகாசி விசாக திருவிழா நிறைவடைகிறது.

படகு சேவை தாமதம்
கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் சார்பில் தினமும் காலை 8 மணிக்கு படகு சேவை தொடங்கும். ஆனால் இன்று காலை திடீரென கடல் நீர்மட்டம் தாழ்ந்து போனதால் படகு சேவை 2 மணிநேரம் தாமதமாக 10 மணிக்குத்தான் தொடங்கியது.

Related posts

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

நீட் தேர்வு முறைகேடு: மேலும் 9 மாணவர்களுக்கு நோட்டீஸ்

ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு