பொதட்டூர்பேட்டையில் கற்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா: 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

பள்ளிப்பட்டு:பொதட்டூர்பேட்டையில் நடந்த கற்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டை நடுத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா முடிந்து 12 ஆண்டுகள் முடிந்த நிலையில், கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 3 நாட்களாக வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. நேற்று காலை மஹா பூரணாகதி ஹோம பூஜைகளைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோயிலைச் சுற்றி கூடியிருக்க, மேளதாளங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீரால் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

பின்னர் ஸ்ரீ கற்பக விநாயகருக்கு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மஹா கும்பாபிஷேக விழாவில் கே.பி.கே. செல்வராஜ், பேரூராட்சித் தலைவர் ஏ.ஜி. ரவிச்சந்திரன், திருத்தணி டி.எஸ்.பி. விக்னேஷ், மகாஜன சங்க நகரத் தலைவர் சுப்பிரமணி, சரவணன் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கோயில் நிர்வாகக்குழு தலைவர் ஏ.வி.நேதாஜி தலைமையில் விழாக் குழுவினர் மகா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. காவல் ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related posts

டெல்லியில் பா.ஜ.க. அலுவலகத்தை ஆம் ஆத்மி கட்சி முற்றுகை

மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு அபாயம்; 3 நாட்கள் செல்ல வனத்துறை தடை விதிப்பு!

வந்தவாசி, உதகை உள்ளிட்ட கிராமங்களில் மிதமான மழை!