பொன்முடியின் அமைச்சர் பதவி ஏற்புக்கு அனுமதி மறுப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பை துளியும் மதிக்காத ஆளுநரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்: பி.வில்சன் எம்பி வலியுறுத்தல்

சென்னை: பொன்முடி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று அறிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுக எம்பியும் வழக்கறிஞருமான வில்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக சட்டத் தலைமை ஆலோசகரும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் எம்.பி. வெளியிட்ட எக்ஸ் பதிவு: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அரசியலமைப்புச் சட்டத்துக்குச் சிறிதும் மரியாதை அளிக்காமல், மீண்டும் மீண்டும் தவறிழைப்பவராக இருந்து வருகிறார். பொன்முடி 19.12.2023 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தண்டனையளித்து தீர்ப்பளிக்கப்பட்டார். ஆனால், 11.03.2024 அன்று உச்சநீதிமன்றம் அந்தத் தீர்ப்பை மற்றும் தண்டனையை நிறுத்தி வைத்தது. அவ்வாறு தீர்ப்பு மற்றும் தண்டனையை நிறுத்தி வைத்த போது, அமைச்சர் பொறுப்பை வகிக்கவோ, சட்டமன்ற உறுப்பினராகத் தொடரவோ இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காகவே இடைக்கால உத்தரவு விதிப்பதாகவும், இல்லையென்றால் அது சரிசெய்ய இயலாத பாதிப்பை உருவாக்கும் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து, கடந்த 13ம்தேதி தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் 19.12.2023 தேதியிலான அவரது பதவிநீக்கம் செல்லாது என்று அறிவித்தார். மேலும், கடந்த 16ம்தேதி திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி (எண்.76) காலியாக உள்ளதாக அறிவித்த அறிவிக்கையையும் தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக் கொண்டது. இதையடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின், கடந்த 13ம்தேதி, பொன்முடியை அமைச்சராக நியமிக்கவும், அவருக்கு உயர்கல்வித்துறையை ஒதுக்கிடவும் கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். இவையனைத்தையும் மீறி ஆளுநர் ரவி, ‘உச்சநீதிமன்றம் தீர்ப்பை நிறுத்தித்தான் வைத்துள்ளது, ரத்து செய்யவில்லை‘ என தனது சொந்த விளக்கத்தை அளித்துள்ளார். இது ஓர் அபத்தமான பொருள்கோடல் என்பதோடு, உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயலுமாகும்.

அரசியல் சட்டப்பிரிவு 142 மற்றும் 144-ன்படி ஆளுநர் என்பவர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டவர். மேலும், பொன்முடியை உயர்கல்வித் துறை அமைச்சராக நியமிக்க தமிழ்நாடு முதல்வர் விடுத்த கோரிக்கையை ஏற்க அவர் அப்பட்டமாக மறுத்தது சட்டமீறலும் அரசியலமைப்புப் பிரிவு 164(1)-க்கு எதிரானதும் ஆகும். இதற்காக ஆளுநர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட வேண்டும். அமைச்சராக நியமிக்கப்படுபவரின் தகுதிப்பாடு குறித்த முதல்வரின் மதிப்பீட்டை ஆளுநர் கேள்வியெழுப்ப முடியாது என்பதைப் பல்வேறு தீர்ப்புகளில் உச்சநீதிமன்றம் தெளிவாக்கி விட்டது.

தமிழ்நாடு பாஜவின் அறிவிக்கப்படாத தலைவராகவே ஆளுநர் செயல்பட்டு வருகிறார். அரசுடன் அவர் கடைப்பிடிக்கும் மோதல்போக்கு கொஞ்சமும் வியப்பளிக்கவில்லை. ஆனால், அவரது தற்போதைய செயலால் அவர் தாம் வகிக்கும் அரசியலமைப்புப் பொறுப்புக்குத் தகாத, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலைப் புரிந்துள்ளார். புனித ஜார்ஜ் கோட்டையில் பாஜவினால் ஒருநாளும் கால்பதிக்க முடியாதென்பதால், ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு மாநில அரசுக்கு இணையாக இன்னொரு அரசை நடத்த அவர் முயல்கிறார். அரசியலமைப்புக்கோ, சட்டங்களுக்கோ, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கோ துளியும் மதிப்பளிக்காத இந்த ஆளுநர் உடனே பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும். ஆளுநர் பதவிக்கே இழுக்கான ரவியை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு இந்தியக் குடியரசுத் தலைவரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Related posts

பாலியல் புகாரில் சிக்கிய பா.ஜ.க. நிர்வாகி அமித் மாளவியாவை பதவியில் இருந்து நீக்குக: காங்கிரஸ் வலியுறுத்தல்

மாநில அரசின் நலத்திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் தலைமைச் செயலாளர்

மக்களவை சபாநாயகர் பதவி யாருக்கு என்பதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் கடும் போட்டி