வாக்குப்பதிவு தரவுகளை வெளியிடுவதில் தாமதம், முரண்பாடுகள் ஏன்? தேர்தல் ஆணையருக்கு சீதாராம் யெச்சூரி கடிதம்

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு குறித்த புள்ளி விவரங்களை வெளியிடுவதில் தாமதம் மற்றும் முரண்பாடுகள் இருப்பது கவலை அளிப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி கடிதம் எழுதி இருக்கிறார். சீதாராம் யெச்சூரி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான புள்ளி விவரங்கள் அதிகமான மற்றும் விவரிக்கப்படாத தாமதத்துக்கு பிறகு 11 நாட்கள் கழித்து வெளியிடப்பட்டது ஆச்சரியமளிக்கிறது. அதே போல் இரண்டாம் கட்ட தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு சதவீதம் அறிவிப்பதற்கு 4 நாட்கள் தாமதம் ஆனது.

ஆரம்ப மற்றும் இறுதி வாக்கு சதவீதத்தில் 6 சதவீதம் வித்தியாசம் உள்ளது. பதிவான வாக்குகளின் எண்ணிக்கை ஏன் வெளியிடப்படவில்லை. துரதிஷ்டவசமாக இந்த தேவையற்ற தாமதத்துக்கான காரணம் குறித்து தேர்தல் ஆணையம் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. ஆரம்ப மற்றும் இறுதி புள்ளி விவரங்களுக்கு இடையில் சிறிது மாறுபாடு இருக்கலாம் என்பது நம்பத்தகுந்ததாக இருந்தாலும், இந்த 6சதவீத மாறுபாடு என்பது அசாதாரணமானது மற்றும் சில சந்தேகங்களை எழுப்புகின்றது. சதவீதங்கள் வெளியிடப்பட்ட நிலையில்வாக்கு எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த செயல்முறையின் வெளிப்படைதன்மை மற்றும் நம்பகத்தன்மையின் நலன் கருதி, இது தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்துவது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். இவ்வாறு யெச்சூரி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

புதிய சிந்தனை, புதிய வெற்றி!

மதுரையில் 22-ம் தேதி அரசு சித்திரை பொருட்காட்சி: ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாட்டுக்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!!