வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்

சேலம்: சேலத்தில் வாக்களிக்க வரிசையில் நின்றபோது முதியவர், மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பழைய சூரமங்கலம் பாண்டியன் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (65). இவரது மனைவி கமலா. இவர்கள் இருவரும் பழைய சூரமங்கலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு இன்று காலை வாக்களிக்க வந்தனர். அப்போது வரிசையில் நின்றிருந்தபோது பழனிசாமி திடீரென மயங்கி விழுந்தார். அவர் மீது அங்கிருந்தவர்கள் தண்ணீரை தெளித்தனர். பின்னர் அவரை அங்கிருந்த சக்கர நாற்காலி மூலம் அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தனர். பழனிசாமி இதய நோயாளி என்பதால் மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதேபோல், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகேயுள்ள செந்தாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்துக்கு கொண்டையம்பள்ளியை சேர்ந்த ரங்கசாமி மனைவி சின்னபொண்ணு (77) என்பவர் வாக்களிக்க வந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே சின்னபொண்ணு உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

19ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

43 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு

மன்னார்குடி அருகே கருத்தநாதபுரத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் குடோனில் தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு