12 மணி நேர வேலை சட்ட மசோதா வாபஸ் முதல்வர் அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் தொழிற்சங்கத்தினர் வரவேற்பு

சென்னை: 12 மணி நேரம் வேலை சட்ட மசோதா வாபஸ் பெறப்படும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு அரசியல் கட்சியினர், தொழிற்சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தொமுச பொது செயலாளர் மு.சண்முகம் எம்பி: மே தினத்தன்று கலைஞரால் நிறுவப்பட்ட மே தின நினைவு சின்னத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, மேதின வாழத்து கூறும் போது முதல்வர் மு.க.ஸ்டாலின்,தொழிற்சாலை சட்டத் திருத்தம் திரும்பப் பெறப்படும் என தொமுச பேரவை நிகழ்வின் போது அறிவித்துள்ளது. தொமுச பேரவையை பெருமைப்படுத்தியதோடு, தமிழ்நாடு தொழிலாளர் நலன் காக்கும் அரசு என்பதையும், ஜனநாயக மாண்புகளை மதிக்கும் அரசு என்பதையும் முதல்வர் உறுதிபடுத்தியுள்ளார். தொழிலாளர் நலன் காக்கும் திமுக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, அரசுக்கும், முதல்வருக்கும் என்றென்றும் தொழிலாளர்கள் அனைவரும் என்றும் துணை நிற்போம்.

மதிமுக பொது செயலாளர் வைகோ: உழைக்கும் வர்க்கத்தின் உன்னதத் திருநாளாம் மே நாளில், தமிழ்நாடு முழுவதும் தொழிலாளர்களுக்கு இனிப்பான செய்தியை வழங்கியிருக்கின்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக சட்டமன்றத்தில் ஏப்ரல் 21ம் தேதி நிறைவேற்றப்பட்ட, தமிழ்நாடு சட்டமன்றம் தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்த) சட்டம்-2023, சட்ட முன்வரைவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது வரவேற்கத் தக்கதாகும். 8 நேரம் வேலை என்பதை உலகத் தொழிலாளர் வர்க்கம் இரத்தம் சிந்தி உயிர்ப்பலிகளைக் கொடுத்து பெற்ற உரிமையாகும். அதனைப் பாதுகாக்கும் வகையில், திராவிட மாடல் அரசு தொழிலாளர்களுக்கு என்றும் துணையாக இருக்கும் என்பதை முதல்வர் பிரகடனப்படுத்தியிருக்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: தொழிலாளர் உரிமை தினமான 137வது மே தினத்தில் பங்கேற்ற முதல்வர், தொழிற்சாலைகள் திருத்தச் சட்டம் 2023 முற்றிலுமாக திரும்பப் பெறப்பட்டது என மகிழ்வான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு இதை வரவேற்கிறது. தொழிலாளர்கள், ஜனநாயக சக்திகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த முதலமைச்சருக்கும், அரசுக்கும் நன்றி, பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்: அடுத்த ஆண்டு இதே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 9 ஆண்டுகாலமாக ஒன்றிய அரசு உழைப்பாளி மக்களின் உரிமைகளை பறித்து வருகிறது‌. அந்த அரசை அடுத்த ஆண்டு வீழ்த்த உழைக்கும் மக்கள் உழைத்து வருகின்றனர். 12 மணி வேலை மசோதாவை தமிழ்நாடு அரசு முழுமையாக திரும்ப பெறுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது வரவேற்கத்தக்கது.

விசிக தலைவர் திருமாவளவன்: 12 மணி நேர வேலை மசோதாவை திரும்பப் பெறுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். எட்டுமணி நேர வேலையை மீண்டும் உறுதிப்படுத்திய முதல்வரின் இந்த நிலைபாட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்றுப் பாராட்டுகிறது. அத்துடன் பாட்டாளி வர்க்கத்தின் சார்பில் எமது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.

ஐ.என்.டி.யு.சி முதன்மை பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம்: தொழிலாளர்கள் தினம், வருடம்தோறும் மே, ஒன்றாம் தேதி கொண்டாடப்படுவதின் நோக்கமே. எட்டுமணிநேரம் வேலை, எட்டுமணி நேரம் ஓய்வு, எட்டுமணி நேரம் உறக்கம் என்பதற்காக ரத்தம் சிந்தி போராடி உயிரை பலிக்கொடுத்து பெற்றதை நினைவுகூர்ந்து கொண்டாடுவதாகும். அதே மேதினம் இன்று எட்டுமணி நேரம் மட்டுமே வேலை என்பதை உறுதிசெய்து சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தை முழுவதுமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆண்டுதோறும் இந்நாளில் நன்றியோடு தொழிலாளர்கள் நினைத்து பார்ப்பார்கள். தமிழ்நாடு இதன் மூலம் திமுகவும், திமுக அரசும் எப்பொழுதே தொழிலாளர்கள் நலனில் மட்டுமல்ல என்றும் அவர்கள் பக்கம் தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சி மற்றும் ஓட்டுமொத்த தொழிலாளர்கள் சார்பில் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Related posts

5-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 23.66% வாக்குகள் பதிவு

திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்தநாளில் முற்போக்கு இந்தியாவை படைக்க உறுதியேற்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 296 பேர் அடங்கிய 10 குழுக்கள் தயார்