அரசு வழங்கிய பட்டாவில் வீடு கட்ட அனுமதி கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நரிகுறவர்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், அரசு வழங்கிய பட்டாவில் வீடு கட்ட அனுமதி வழங்கக்கோரி நரிகுறவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா காவித்தண்டலம் கிராமத்தில் நரிகுறவர் இனத்தை சேர்ந்த ஹரிதாஸ், கோட்டையன், கார்த்தி, ஆறுமுகம் ஆகிய 4 பேர், தங்கள் குடும்பத்துடன் மூங்கில் கூடை முடையும் வேலை செய்து வருகின்றனர். இவர்கள், காவித்தண்டலம் கிராமத்தில் கடந்த 23 வருடமாக மரத்தடியிலும், கோயில் மேடைகள், கடை வாசல்களில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவை அனைத்தும் உள்ளது. இவர்களின் நிலையறிந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாடு அரசு சார்பில், ஓரக்காட்டுபேட்டை கிராமத்தில் இலவசமாக வீட்டுமனை ஒதுக்கீடு செய்து பட்டா வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஒரக்காட்டுப்பேட்டை கிராமத்தில் ஒதுக்கீடு செய்த வீட்டுமனையில் நரிகுறவர்யின குடும்பங்கள் வீடு கட்ட சென்றபோது, ஊராட்சி மன்ற நிர்வாகம், ஊர் மக்கள் வீடு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த நரிக்குறவர்கள், இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் பட்டா வழங்கி ஓராண்டு ஆகியநிலையில், தங்களுக்கு வழங்கிய வீட்டுமனையில் வீடு கட்ட அனுமதிக்க வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடாவது செய்துத்தர வேண்டும் என நரிக்குறவர் பெண் ஹரிதாஸ் மனைவி அம்மு, தனது கைக்குழந்தையுடன் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மக்கள் குறைதீர்க்கும் நடைபெறும் கூட்டம் அரங்கிற்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை அழைத்துக்கொண்டு கலெக்டரும் சென்று கோரிக்கையை நேரடியாக தெரிவித்தனர். அப்போது, கலெக்டர் கலைச்செல்வி மோகன், இக்கோரிக்கையின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதேபோல, வாலாஜாபாத் அருகே உள்ள கீழ் ஒட்டிவாக்கம் கிராமத்தை சேர்ந்த 5 குடும்பங்களுக்கு பட்டா வழங்கியும் தற்போது அதில் நீர்நிலை புறம்போக்கு என்று கூறி பட்டாவை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமும், பட்டாவையும் வீட்டுமனையும் பகரிக்க நினைக்கிறது என்று 5 பெண்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.

 

Related posts

சென்னை – ஹவுரா சூப்பர் பாஸ்ட் மெயில் சம்பவம் பரிதாபமான நிலையில் ரயில் சேவை: தயாநிதி மாறன் எம்.பி கண்டனம்

2024 ஜன. முதல் ஏப். வரை 10.14 கோடி சுற்றுலா பயணிகள் வருகை: அமைச்சர் தகவல்

ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்: துணை முதல்வரானார் நடிகர் பவன்கல்யாண்: பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு