மக்கள் மன்றம் தீர்ப்பு தரும்

டெல்லி முதல்வரும், ’இந்தியா’ கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, அமலாக்கத்துறை, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பலமுறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து, கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘விளைவு ஏற்படுத்தக்கூடிய வகையிலான கட்டாய நடவடிக்கை ஏதும் தனக்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுக்கக்கூடாது.

நான் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினால், தன்னை கைது செய்யமாட்டோம் என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உறுதி அளிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. மனு தள்ளுபடியான உடனே, கைது வாரட்ண்டுடன் கெஜ்ரிவால் வீட்டை அமலாக்கத்துறையினர் முற்றுகையிட்டு, சுமார் 4 மணி நேர ரெய்டுக்கு பின்னர் கைது செய்துள்ளனர்.

கடந்த 2 மாதங்களில் கைது செய்யப்படும் இரண்டாவது முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆவார். அமலாக்கதுறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றன. ‘‘ஊடகங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றுவது, கட்சிகளை உடைப்பது, நிறுவனங்களிடம் நிதியை பறிப்பது, எதிர்க்கட்சியின் வங்கி கணக்கை முடக்குவது போன்றவையும் ஒன்றிய அரசுக்கு போதவில்லை.

இப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களையும் கைது செய்வது வாடிக்கையாகிவிட்டது. பயந்த சர்வாதிகாரி, இறந்த ஜனநாயகத்தை உருவாக்க விரும்புகிறார். இதற்கு, ‘இந்தியா’ கூட்டணி தக்க பதிலடி கொடுக்கும்’’ என ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.  கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ மற்றும் அமலாக்க துறையினரால், கெஜ்ரிவாலுக்கு எதிராக ஒரு ரூபாயை கூட கைப்பற்ற முடியவில்லை.

அதனால் ஆம் ஆத்மி மட்டுமின்றி, ‘‘இந்தியா’’ கூட்டணிக்கு கடும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒன்றிய அரசின் நிர்பந்தம் காரணமாக அமலாக்க துறையினர் இந்த கைது நடவடிக்கையை துவக்கியுள்ளனர். தற்போது நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, மனுத்தாக்கலும் தொடங்கிவிட்ட நிலையில், ஒவ்வொரு கட்சியும் வேகமெடுத்து வருகின்றன. தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ள இந்த சூழலில், ஒன்றிய அரசு, அமலாக்கத்துறையின் பாய்ச்சலை வேகமெடுக்க வைத்திருக்கிறது.

ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும், தேர்தல் நன்னடத்தை விதிகள் கட்டுப்படுத்தாது. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, விசாரணை அமைப்புகளின் பாய்ச்சலை ஒன்றிய அரசு பொதுவாக கட்டுப்படுத்தி வைக்கும். ஆனால், தற்போதைய ஒன்றிய அரசு, விசாரணை அமைப்புகளை சீண்டி விடுவதால், கைது நடவடிக்கை மற்றும் அதிரடி ரெய்டுகள் தொடர்கிறது.

எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக, தேர்தல் பணியில் அவர்களின் கவனத்தை முடக்குவதற்காக இத்தகைய ரெய்டுகள் நடத்தப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பாஜவுக்கு எதிரான மனநிலையை உருவாக்கியுள்ளது. இன்னும் சொல்லப்போனால், அவர்களுக்கு எதிராக அவர்களே சவக்குழி தோண்டும் நிலை உருவாகியுள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுவே, நாடு முழுவதும் மூலை, முடுக்கெல்லாம் தற்போது ஒலிக்கிறது. இதுபோன்ற ஜனநாயக படுகொலைக்கு எதிரான மக்கள் மன்றத்தின் தீர்ப்பு மிக விரைவில் வெளிவர உள்ளது என்பதே நிதர்சனம்.

Related posts

சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் சுரங்கப்பாதை அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

கூகுள் மேப்பால் விபரீதம்; சென்னையில் 7 பேர் மீது காரை ஏற்றி இறக்கிய பெண்: போலீஸ் விசாரணை