நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி; தவறு செய்தவர்கள் மீது தாமதமின்றி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி, தவறு செய்தவர்கள் மீது தாமதமின்றி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். எதிர்காலத்தில் பாதுகாப்பு குறைபாடுகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் அத்துமீறி மக்களவை பகுதியில் நுழைந்த 2 பார்வையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாவலர்களும் அங்கிருந்த எம்பிக்களும் சுற்றி வளைத்து அந்த இரு நபர்களையும் பிடித்து கைது செய்துள்ளனர். நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான இன்று இருவர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.’சர்வாதிகாரம் கூடாது’ என அந்த இருவரும் முழக்கமிட்டதோடு தங்கள் காலனியில் மறைத்து வைத்திருந்த புகையை உமிழும் பொருளை எடுத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடைபெற்ற வருகிறது. தடை செய்யப்பட்ட பொருட்களுடன் அந்த இருவர் எப்படி பார்வையாளர் பகுதிக்கு வந்தனர் என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு வளையங்களை மீறி நாடாளுமன்றத்தின் மக்களவையில் நடந்த இந்த சம்பவத்தையடுத்து நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து நாடு முழுவதிலும் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “நாடாளுமன்றத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்புக் கெடுபிடிகள், நமது ஜனநாயகக் கோவிலுக்கு ஆபத்தான அச்சுறுத்தலாக உள்ளது.

தாமதமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடி விசாரணையைத் தொடங்கவும், பொறுப்புக்கூறலைச் சரிசெய்யவும், எதிர்காலத் தவறுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும், இந்த முக்கியமான நிறுவனத்தின் பாதுகாப்பை எங்கள் கட்டளையின் அனைத்து வலிமையுடன் உறுதிப்படுத்தவும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்