நாடாளுமன்ற தேர்தல்: வேலூர், அரக்கோணம் நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை..!!

சென்னை: வேலூர், அரக்கோணம் நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக, அதிமுக போன்ற பல்வேறு கட்சிகள் செயலில் இறங்கி இருக்கின்றன. கடந்த 24ம் தேதி முதல் நாடாளுமன்ற தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறது. அந்த வகையில் 8வது நாளாக இன்றைய தினம் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வேலூர், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறது.

வேலூர் தொகுதி இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிகம் கவனிக்கக்கூடிய தொகுதியாக உள்ளது. ஏற்கனவே ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, இந்த முறை ராமநாதபுரம், வேலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட தொகுதிகளில் ஒரு தொகுதியை கேட்பதாக கூறப்படுகிறது. எனவே வேலூர் தொகுதியை பொறுத்தவரை கூட்டணி கட்சியா? அல்லது திமுகவா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த முறை வேலூர் தொகுதியில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிருந்தார். எனவே வேலூர் தொகுதி நிர்வாகிகளின் கருத்துக்களை திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கேட்டு வருகிறது.

கள சூழல், தேர்தல் பணி தொடர்பான விரிவான ஆலோசனையும் நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு மற்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதி ஆலோசனையின் போதும் வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது? யாருக்கு வாய்ப்பு அளித்தால் வெற்றி பெறுவது சுலபமாக இருக்கும்? என்று திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசித்து வருகிறது.

இரண்டாவது தொகுதியாக உள்ளது அரக்கோணம். இந்த அரக்கோணம் தொகுதியில், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் மீண்டும் திமுக போட்டியிட முடிவு செய்துள்ளது. எனவே இந்த அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு அதற்கு பிறகு வேட்பாளர் தேர்வு, தேர்தல் பணி தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையை தேர்தல் ஒருங்கிணைப்பு குழு எடுக்கும்.

Related posts

தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு: அதிமுக கண்டனம்

கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழ காரணம்: மல்லிகார்ஜுன கார்கே குற்றசாட்டு

தங்கம் விலை பவுனுக்கு 120 குறைந்தது