போராட்டங்கள் நடந்த நிலையிலும் பிளஸ் 2 தேர்வில் பரந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை: ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டு

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்த நிலையிலும், படிப்பில் கவனத்தை செலுத்தி, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் பரந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்கு, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தாலுகா, பரந்தூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பரந்தூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய விவசாய குடும்பங்களை சேர்ந்த 81 மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பில், நான்கு பாடப்பிரிவுகளில் கல்வி கற்று வருகின்றனர்.

பரந்தூர் சுற்று வட்டார கிராமங்களை உள்ளடக்கிய பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், கிராமப்புற மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பரந்தூர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 81 மாணவ, மாணவிகளும் படிப்பில் இருந்து கவனத்தை திசை திருப்பாமல், பாடம் கற்பித்த ஆசிரியர்களுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து கல்வி கற்று, பிளஸ்2 அரசு பொதுத்தேர்வினை எழுதி முடித்தனர். இத்தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டநிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், பரந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பயின்ற 45 மாணவிகள், 36 மாணவர்கள் என 81 பேரும், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் அதிக அளவில் மதிப்பெண்கள் எடுத்து முழுமையாக 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில், வணிகவியல் பாடத்தில் 6 பேரும், கணக்குப்பதிவியல் பாடத்தில் ஒருவரும், வரலாறு பாடத்தில் 2 பேரும், பொருளியல் பாடத்தில் ஒருவர் என 10 பேர், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 100% சதவிகிதம் தேர்ச்சி பெற்ற ஒரே அரசு மேல்நிலைப்பள்ளி எனும் பெருமையை ஏற்படுத்தியுள்ளது. இப்பள்ளி சேர்ந்த ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பல்வேறு தரப்பினர் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

வெங்கப்பாக்கம் அரசு பள்ளி சென்டம்: திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் மொத்தம் 61 அரசு மேல் நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் உள்ள வெங்கப்பாக்கம் அரசினர் மேல் நிலைப்பள்ளி, இந்தாண்டு 67 ஆண்கள் 62 பெண்கள் என மொத்தம் 129 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.தேர்வு முடிவுகள் நேற்று வெளியானநிலையில், இப்பள்ளியில் தேர்வெழுதிய 129 மாணவ – மாணவியரும் தேர்ச்சியடைந்தனர். இதனால், இப்பள்ளி தேர்ச்சி விகிதம் 100 சதவீதம் அடைந்தது. இது செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் உள்ள 61 அரசு மேல் நிலைப்பள்ளிகளில் முதலிடம் பிடித்த பள்ளியாக இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் முதலிடம் பிடிப்பதற்கு காரணமான இப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி பாராட்டினர்.

தொடர்ந்து வெங்கப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வேண்டாமிர்தம் ஏழுமலை மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டு மாணவ – மாணவிகளையும், ஆசிரியர்களையும் பாராட்டினர். இது குறித்து பள்ளிய தலைமையாசிரியை மீனாகுமாரி கூறுகையில், ‘தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம், உயர் கல்வி வழிகாட்டி பற்றி தினமும் மாணவ-மாணவிகளுக்கு நாங்கள் எடுத்து சொல்லியும், எதிர்காலத்தில் கல்வியின் அவசியம் மற்றும் தேவைகளை எடுத்துரைத்தும், ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்து வருகிறோம். மாணவ-மாணவிகளும் எங்கள் பேச்சைக் கேட்டு முயற்சி எடுத்து படித்ததனால் இந்த 100 சதவீத வெற்றியைபெற முடிந்தது. எனவே, இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கும், பள்ளி கல்வித்துறைக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்