பரமத்திவேலூர் அருகே 4 ஆயிரம் வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு

நாமக்கல்: நாமக்கல் அருகே 4000க்கும் மேற்பட்ட வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சேதப்படுத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்த நித்யா என்பவர் கடந்த மார்ச் மாதம் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 10பேரை ஜேடர்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தநிலையில், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதனிடையே அந்த பகுதியில் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வீடுகள், வெல்ல ஆலையில் தங்கியிருந்தவர்களின் குடியிருப்பில் பெட்ரோல் குண்டு வீச்சு, வாழை, மற்றும் பாக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கவும் குற்றவாளிகளை பிடிக்கவும் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோமணி என்கிற சுப்பிரமணி (42) என்பவரது 5 ஏக்கரில் இருந்த சுமார் 4000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணா, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து வாழை மரங்களை வெட்டி சாய்த்த மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நத்தப்பட்டு வருகிறது.

Related posts

வெப்ப அலை காரணமாக இண்டிகோ விமானம் புறப்படுவதில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதம்

ஒசூர் அருகே உடல்நலக்குறைவால் 30 வயதான பெண் யானை உயிரிழப்பு

மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ள 21-ம் தேதி முதல் டோக்கன்: மாநகர போக்குவரத்துக் கழகம்