எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞர் பலி! பம்மல் தனியார் மருத்துவமனையில் உரிமம் ரத்து செல்லாது! : சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!!

சென்னை: சென்னை பம்மலில் எடை குறைப்பு அறுவை சிகிச்சையில் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் பி.பி.ஜெயின் மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின்போது, புதுச்சேரி இளைஞர் ஹேமச் சந்திரன் உயிரிழந்த விவகாரத்தில், அறுவை சிகிச்சை மேற்கொண்ட தாம்பரத்தில் உள்ள பம்மல் டிபி ஜெயின் தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டது. மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்ததில் போதிய வசதிகள் இல்லை என்பது கண்டறியப்பட்ட நிலையில் இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.அறுவை சிகிச்சைக்கான போதிய பயிற்சி பெற்ற மருத்துவர்களும் மருத்துவமனையில் இல்லை என்றும் மருத்துவமனையில் டெக்னீசியன்கள், உயிர்காக்கும் சிகிச்சைக்கான கருவிகள் போதுமான அளவு இல்லை எனவும் சுகாதாரத்துறை தெரிவித்தது.

இந்த நிலையில் மருத்துவமனையின் உரிம ரத்தை எதிர்த்து மருத்துவமனை நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், எடை குறைப்பு அறுவை சிகிச்சையில் இளைஞர் ஹேமசந்திரன் உயிரிழந்த மருத்துவமனையின் உரிமம் ரத்து செல்லாது என்று உத்தரவிட்டார். அதோடு நோயாளியிடம் முன்பே அனுமதி பெற்ற பின்பு தான் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றும் 23 ஆண்டுகளாக சிறப்பான முறையில் செயல்பட்டு வந்த மருத்துவமனையிடம் உரிய விளக்கம் கேட்காமல் உரிமம் ரத்து செய்யப்பட்டது தவறு என்றும் கூறினார். மேலும் மருத்துவமனை தொடர்ந்து செயல்படவும் அனுமதி வழங்கி உள்ளார். மருத்துவமனைகள் வணிக நோக்கில் செயல்படும் போது குறைந்த அளவிலான கட்டணத்தை வசூலிக்கும் மருத்துவமனைகள் அவசியம் தேவை என்றும் எனவே இந்த மருத்துவமனைகளின் பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும் என்றும் சுவாமிநாதன் குறிப்பிட்டார்.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு