பழவேற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் செவிலியர்களுடன் வாக்குவாதம்; வீடியோ வெளியானதால் பரபரப்பு

பொன்னேரி: பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, பழவேற்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுசெல்கின்றனர். கர்ப்பிணிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் செயல்படும் இங்கு காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை புறநோயாளிகள் பிரிவிலும், பிற்பகலுக்கு மேல் அவசர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதன்பிறகு இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை செவிலியர்கள் மட்டும் இருந்து சிறுசிறு சிகிச்சை அளிப்பார்கள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் உடல்நிலை சரியில்லாத நோயாளிகள் பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். மருத்துவமனையின் கதவு பூட்டப்பட்டு இருந்ததால் தட்டியுள்ளனர். அப்போது உள்ளே இருந்து வந்த செவிலியர், இரவு 8 மணிக்கு மேல் சிகிச்சை அளிக்கமாட்டோம். வேறு எங்காவது செல்லுங்கள் என கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள், 24 மணி நேரமும் மருத்துவமனை செயல்படும் என கூறப்படும் நிலையில் இரவு 8 மணி வரைதான் சிகிச்சை அளிப்போம் என எப்படி சொல்லலாம் என செவிலியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருபாலைவனம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நோயாளிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லும்படி கூறினர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பழவேற்காடு அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியில் ஈடுபட்ட 4 பேர் திடீரென பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். போதிய செவிலியர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

22ல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.. தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!!

மதுரையில் குழந்தைகள் தத்தெடுப்பு மையத்தில் உள்ள 55 குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை மீண்டும் உயர்வு: ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 250 பூண்டு 350க்கு விற்பனை