நெற்பயிர்களுக்கும்,வாழைகளுக்கும் உரிய இழப்பீடு தொகையினை விரைந்து வழங்க வேண்டும் : விஜயகாந்த்

சென்னை : நெற்பயிர்களுக்கும்,வாழைகளுக்கும் உரிய இழப்பீடு தொகையினை விரைந்து வழங்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

அதேபோல் கடலூர் மாவட்டம் ராமாபுரம், கீரப்பாளையம், ஒதியடிக்குப்பம், வெள்ளக்கரை, அரசடிக்குப்பம், வழிசோதனைப்பாளையம், அன்னவல்லி, வழுதலம்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் சுமார் 1000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பூவன், ஏலக்கி, பேயன் உள்ளிட்ட வாழைகள் முறிந்து விழுந்தன. குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் சேதமானதால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை செலவு செய்த விவசாயிகளுக்கு தற்போது கடன் சுமை மேலும் அதிகரித்துள்ளது. கடன் சுமையில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கும், வாழைகளுக்கும் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உரிய இழப்பீடு தொகையினை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

லாரி முன் பாய்ந்து சுகாதார ஆய்வாளர் தற்கொலை

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இதுவரை பிரஜ்வல் மீது புகார் அளிக்கவில்லை: தேசிய மகளிர் ஆணையம் தகவல்

குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வில் நூதன மோசடி; ஆசிரியர் மீது வழக்கு பதிவு: ரூ7 லட்சம், செல்போன் பறிமுதல்