நெல்லையில் எச்சரிக்கையையும் மீறி அலட்சியம்; சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட்: வீடியோ வைரலானதால் அதிரடி

நாகர்கோவில்: சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் அரசு பஸ் ஓட்டி சிக்கிய விவகாரம் தொடர்பாக டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு 65 பயணிகளுடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ், நேற்று முன்தினம் மாலை சென்றுகொண்டிருந்தது. பஸ்சை குமரி மாவட்டம், குளச்சல் பணிமனையை சேர்ந்த சசிகுமார் ஓட்டிச்சென்றார். நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கனமழை காரணமாக ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியிருந்தது. பஸ் அங்கு சென்றதும், அங்கு நின்ற ஒருவர், ‘போகாது…போகாது… பாலத்தில் 4 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. பஸ் ேபாக முடியாது’ என்று கூறினார். அதற்கு டிரைவர் சசிகுமார், ‘லாரி ஒன்று சென்றதே, எனவே போய் விடலாம்’ என்றார்.

உடனே அந்த நபர், ‘உங்க இஷ்டம் போறனா போங்க…’ என்று கூறினார். கொட்டும் மழையிலும் குடை பிடித்தபடி நின்ற அந்த நபர் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் டிரைவர் பஸ்சை சுரங்கப்பாதையில் இயக்கினார். இதனால் அங்கு தேங்கியிருந்த மழைநீரில் சிக்கி பஸ் நின்றது. பயணிகள் வெளியேற முடியாமல் தவித்தனர்.
தகவலறிந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பஸ்சில் இருந்த பயணிகளை அவசர வழியை திறந்து தோளில் சுமந்து ஒவ்வொருவராக மீட்டனர். சுரங்கப்பாதையில் செல்ல வேண்டாம் என ஒருவர் டிரைவரிடம் சொல்வதும், அதை மீறி சென்ற அரசு பஸ் சுரங்கப்பாதை மழைநீரில் சிக்கி நிற்பதும் வீடியோ காட்சிகளாக சமூக வலைதளங்களில் வைரலானது.

இதை தொடர்ந்து டிரைவர் சசிகுமாரை சஸ்பெண்ட் செய்து நாகர்கோவில் கோட்ட பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Related posts

இசிஆரில் போலி ஆவணம் மூலம் ரூ.300 கோடி நிலம் விற்பனை பதிவுத்துறை அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட்: ஐஜி ஆலிவர் பொன்ராஜ் அதிரடி

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை எடியூரப்பாவுக்கு பிடிவாரன்ட்: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்: சிபிசிஐடி ஏடிஜிபி நேரடி விசாரணை