ஓபிஎஸ், சசிகலா, டிடிவி சேர்ந்தாலும் பாதிப்பில்லை பூஜ்ஜியங்கள் இணைந்து ராஜ்ஜியம் அமைத்ததாக வரலாறு இல்லை: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சென்னை: ‘பூஜ்ஜியமும், பூஜ்ஜியமும் இணைந்து ராஜ்ஜியம் அமைத்த வரலாறு இல்லை’ என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார். சேலத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
ஓபிஎஸ், டிடிவி தினகரன் சந்திப்பு என்பது சந்தர்ப்பவாத சந்திப்பு. இதனால் எவ்வித தாக்கமும் ஏற்படாது. அதிமுக விவகாரத்தில் பத்து முறை நீதிமன்றத்தில் முறையிட்டும் அவர்களுக்கு தோல்வி கிடைத்திருக்கிறது. தேர்தல் ஆணையம் தீவிர ஆய்வு செய்து, ஆதாரத்தின் அடிப்படையில் முடிவு செய்துள்ளது. பொதுச்செயலாளர் பொறுப்பில் எடப்பாடி பழனிசாமியை தொண்டர்கள் தான் வைத்துள்ளார்கள். இதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது.
அரசியல் நாகரீகத்துடன் பேச எங்களுக்கு முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பயிற்சி கொடுத்துள்ளனர். அந்த அரசியல் நாகரீகம் அவர்களுக்கு இருந்தால், மக்கள் முகம் சுளிப்பது போல பேச மாட்டார்கள். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்தாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அதிமுக என்பது ஒன்றாம் நம்பர். அந்த ஒன்று இருக்கும்போது, பூஜ்ஜியத்திற்கெல்லாம் மதிப்பு கிடையாது. பூஜ்ஜியமும், பூஜ்ஜியமும் இணைந்து ராஜ்ஜியம் அமைத்த வரலாறு கிடையாது. இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

* பியூஸ் போன சந்திப்பு
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஓபிஎஸ், தினகரன் சந்திப்பு எல்லாம் பியூஸ் போனவர்களின் சந்திப்பு. அது முடிந்து போனது. வேறு எதுவும் பண்ண முடியாது. யார் தவறு செய்திருந்தாலும் அவர்களது ஊழல் பட்டியலை பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிடலாம். எங்களது மடியில் எந்த கனமும் இல்லை. நாங்கள் பயப்பட அவசியமுமில்லை,’’ என்றார். இதேபோல் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அக்ரிகிருஷ்ணமூர்த்தி, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரும் ஓபிஎஸ்-தினகரன் சந்திப்பு பற்றி கடும் விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் எங்கே? பஞ்சாப் பாஜ வேட்பாளருக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மலரவன் மறைவுக்கு எடப்பாடி இரங்கல்

3 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்