தஞ்சையில் வைத்திலிங்கம் மகன் திருமணம்; ஓபிஎஸ், தினகரனை புறக்கணித்த சசிகலா: தென்மாவட்ட நிர்வாகிகள் ஏமாற்றம்

தஞ்சை: தஞ்சையில் வைத்திலிங்கம் மகன் திருமண விழாவில் சசிகலாவை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம், டிடிவி ஆகியோர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர்கள் இருவரையும் சசிகலா புறக்கணித்து விட்டார். நடுநிலை வகிப்பதுபோல அவர் காட்டிக் கொள்வதால் விழாவை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் மோதல் ஏற்பட்டபோது, அவருக்கு பக்க பலமாக இருந்தவர் வைத்திலிங்கம். தற்போது பன்னீர்செல்வத்திடம் இருக்கும் ஆதரவாளர்களில் அதிகமானவர்கள் வைத்திலிங்கம் பின்னால் வந்தவர்கள். பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களும் அவருடைய ஆதரவாளர்கள்தான்.

இதனால் அவரை தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிச்சாமி எவ்வளவோ முயன்றார். ஆனால் முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிச்சாமியின் பக்கம் என்றதால், ஏற்கனவே அதிமுகவை கைப்பற்ற முயன்று தோற்றுப்போன டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் இணைந்து செயல்பட ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டார். இதற்காக டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோருடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்துப் பேசினர். இதனால் அவர்கள் விரைவில் சசிகலாவையும் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கு ஏற்றார்போல பன்னீர்செல்வமும், சசிகலாவை விரைவில் சந்திப்பேன் என்று கூறினார். ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால், தென் மாவட்டங்களில் அதிமுகவின் செல்வாக்கை தகர்க்கவும், தங்களுக்குத்தான் தென் மாவட்டங்களில் செல்வாக்கு அதிகம் என்று காட்டவும் அவர்கள் திட்டமிட்டு செயல்படத் தொடங்கியுள்ளனர். மேலும் தாங்கள் 3 பேரும் ஒன்றாக இருப்பதாக காட்டிக் கொள்ளவும் அவர்கள் திட்டமிட்டு செயல்படத் தொடங்கினர். ஆனால் அதில், சசிகலா மட்டும் மறைமுக ஆதரவு தெரிவித்தவர், வெளிப்படையாக ஆதரவு கொடுக்க மறுத்து வருகிறார்.

அவர் எப்படியும் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைவார். அப்போது தொண்டர்கள், நிர்வாகிகள் தன்னை தலைமை ஏற்க அழைப்பார்கள் என்று சசிகலா நினைக்கிறார். இதற்காக நடுநிலை வகிப்பதுபோல காட்டிக் கொள்கிறார் சசிகலா. தான் அனைத்து அதிமுக தொண்டர்களுக்கும் பொதுவானவர் போல காட்டிக் கொள்ள முடிவு செய்துள்ள சசிகலா, நேரடியாக பன்னீர்செல்வம், டிடிவி ஆகியோரை சந்திக்க தயக்கம் காட்டி வருகிறார். இந்நிலையில்தான்,
ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவர் வைத்திலிங்கத்தின் இளைய மகன் திருமண விழா தஞ்சை புது பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

விழாவில் பங்கேற்க ஓ.பன்னீர் செல்வம் நேற்று இரவு தஞ்சை வந்தார். இன்று காலை விழா நடைபெறும் மண்டபத்துக்கு ஓபிஎஸ் காரில் வந்தார். சிறிது நேரத்தில் அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன் வந்தார். காரிலிருந்து இறங்கிய இருவரும் சந்தித்து நலம் விசாரித்து கொண்டனர். பின்னர் மண்டபத்துக்குள் இருவரும் ஒன்றாக சென்று அருகருகே இருக்கையில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஒரே மேடையில் இணைந்து விழாவில் பங்கேற்றனர். விழாவில் கலந்து கொள்ள சசிகலாவுக்கு, வைத்திலிங்கம் நேரில் அழைப்பிதழ் வழங்கினார். ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை.

சசிகலாவின் வாழ்த்து ெசய்தி வாசிக்கப்பட்டது. இதனால் இவர்கள் இருவரையும் பொது இடத்தில் சந்திப்பதை சசிகலா தவிர்த்து விட்டார் என்று கூறப்படுகிறது. இருவரையும் மறைமுகமாக ஆதரிக்கும் சசிகலா, வெளிப்படையாக ஆதரிக்க மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இதனால் விரைவில் சசிகலாவை தனியாக சந்தித்துப் பேச ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Related posts

தமிழகத்தில் 6ம் தேதி வரை வெப்ப அலை: 5 நாட்களுக்கு கோடை மழை

மே 6ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்: மே 10ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரேபரேலி தொகுதியில் ராகுல் போட்டி: பிரியங்கா போட்டியிடுவார் என கருதிய நிலையில் அமேதி தொகுதியில் கே.எல்.சர்மா நிற்கிறார்