செங்கடலில் நீடிக்கும் பதற்றம் இந்தியாவுக்கு வந்த கப்பல் மீது ஹவுதி ஏவுகணை தாக்குதல்

டெல்அவிவ்: அமெரிக்காவில் இருந்து இந்தியா நோக்கி வந்த வணிக கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய போர் 4 மாதங்களை கடந்தும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்காவும், இங்கிலாந்தும் ஆதரவுக்கரம் நீட்டியுள்ள நிலையில், ஹமாஸ் படையினருக்கு ஹவுதி படையினரும், ஹிஸ்புல்லா அமைப்பும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்த ஆதரவை உறுதிப்படுத்தும் விதமாக செங்கடலில் இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் வணிக கப்பல்களை குறி வைத்து ஹவுதி அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது. அதன்ஒரு பகுதியாக நேற்றும் இரண்டு வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்காவில் இருந்து இந்தியா நோக்கி கிரேக்கத்துக்கு சொந்தமான வணிக கப்பல் வந்து கொண்டிருந்தது.

இந்த கப்பல் ஏமனின் தெற்கு துறைமுக நகரமான ஏடன் வளைகுடா பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதேபோல் மற்றொரு துறைமுக நகரமான ஹொடேய்டாவுக்கு மேற்கே வணிக கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் வௌியாகவில்லை.

* திரும்பி சென்ற கப்பல்கள்
மாநிலங்களவையில் ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் பக்வந்த் குபா கூறுகையில், இந்தியாவிற்கு உரம் கொண்டு வரும் கப்பல்களுக்கு வெளியுறவு மற்றும் இந்திய கடற்படை பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதுவரை செங்கடல் வழியாக உரங்களை ஏற்றி வந்த 7 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.