முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, மீட்புப் பணிகளை பார்வையிட ஒடிசா சென்றது தமிழ்நாடு குழு!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார்.விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மருத்துவம் மற்றும் இதர உதவிகளை செய்திடவும் மேலும், மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த விபத்தில் காயமடைந்த மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் தேவையான உதவிகளை செய்திடவும்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள், போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. குமார் ஜயந்த், இ.ஆ.ப., மற்றும் ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் திருமதி அர்ச்சனா பட்நாயக், இ.ஆ.ப., ஆகியோர் கொண்ட குழு ஒன்றினையும் உடனடியாக அனுப்பி வைத்தார். அவர்கள் இன்று (3.6.2023) காலை ஒடிசா மாநிலத்திற்கு விமானம் மூலம் சென்றடைந்தனர்.

அங்கிருந்து அமைச்சர்கள் மற்றும் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோர் விபத்து நடந்த பாலசோர் என்ற இடத்திற்கு அரசு ஹெலிகாப்டர் மூலம் விரைந்துள்ளனர். மற்றொரு குழுவான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர். ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் ஆகியோர் ஒடிசாவில் இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சென்றுள்ளனர். அமைச்சர் பெருமக்களைக் கொண்ட குழு விபத்து நடந்த இடத்தில் உள்ள நிலவரங்களையும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளையும் மேலும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள குழுவினர் விபத்து நடந்த இடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விபரங்கள் குறித்து உடனுக்குடன் தமிழ்நாடு அரசிற்கு தெரிவிப்பார்கள். அதனடிப்படையில் தொடர் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Related posts

காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார் சாம் பிட்ரோடா

கோவை அருகே வனப்பகுதியில் ஓடையில் இறந்து கிடந்த பெண் யானை: வனத்துறை விசாரணை

தமிழகத்தில் தற்போது கோடை வெயிலில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ராசிபுரம் அருகே மழை வர வேண்டி சிறப்பு யாக பூஜை…