இவிஎம் மெஷின் வேண்டவே வேண்டாம் வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும்: ராஷ்ட்ரிய ஜனதா தளம் வலியுறுத்தல்

பாட்னா: தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் வலியுறுத்தி உள்ளது. பீகாரில் மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே மற்றும் அருண் கோயல் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் பாட்னா சென்றனர். அங்கு தேர்தல் நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் துறை, காவல் துறை உள்பட பிறதுறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பீகாரில் தேர்தல் ஆணைய குழுவினரை சந்தித்த ராஷ்ட்ரிய ஜனதா தள துணைத்தலைவர் விருஷன் படேல், மாநில செய்தி தொடர்பாளர் சித்தரஞ்சன் ககன் மற்றும் மாநில பொதுசெயலாளர் முகுந்த் சிங் ஆகியோர், “நாடு முழுவதும் நியாயமான, சுதந்திரமான தேர்தலை உறுதி செய்ய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக மீண்டும் வாக்குச் சீட்டு முறையை கொண்டு வர வேண்டும். வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருக்கும்வரை வாக்குப் பதிவு ஒப்புகை சீட்டுகள் அந்தந்த வாக்காளர்களுக்கு காட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தபால் வாக்கு மூலம் பதிவாகும் வாக்குகளை மின்னணு வாக்குப் பதிவு எண்ணிக்கை தொடங்கும்முன் எண்ணி முடிக்கப்பட வேண்டும். தலித், பழங்குடியினர் போன்ற நலிந்த பிரிவினர் வாக்குரிமையை பயன்படுத்துவதை உறுதி செய்து, முக்கியத்துவம் வாய்ந்த வாக்குச்சாவடிகளை வரையறை செய்ய வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். இதேபோல் ஐக்கிய ஜனதா தளம் சார்பில், “பீகாரில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்துவதால் மாநிலத்தின் வளம் பாதிக்கப்படும். எனவே, வாக்குப்பதிவை 3 கட்டங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்

காதல் விவகாரத்தில் கத்திக்குத்து முன்னாள் காதலன் பரிதாப பலி: இந்நாள் காதலன் வெறிச்செயல்

மும்பை வடமேற்கு தொகுதியில் EVM-ல் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்