புதிதாக 6 இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க திட்டம் டெல்டாவை அழிக்க பாஜ அரசு சூழ்ச்சி: அன்புமணி குற்றச்சாட்டு

சேலம்: தமிழ்நாட்டில் புதிதாக 6 இடங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஒன்றிய பாஜ அரசு திட்டமிட்டிருப்பது, டெல்டாவை அழிக்கும் சூழ்ச்சி என்று அன்புமணி குற்றம் சாட்டி உள்ளார். சேலத்தில் நேற்று, பாமக தலைவர் அன்புமணி அளித்த பேட்டி: சேலம் உருக்காலையை ஒன்றிய பாஜ அரசு தனியாருக்கு தாரை வார்ப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இரும்பாலை தொழிற்சாலை இருக்கும் இடம் போக மீதமுள்ள 3,000 ஏக்கர் நிலத்தை, யாரிடம் எடுத்தார்களோ அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது மாநில அரசு எடுத்துக்கொண்டு புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு (என்எல்சி) இனி ஒருபிடி மண் எடுக்க கூட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

புதிதாக சேத்தியாதோப்பு, மைக்கேல்பட்டி, வடச்சேரி, ஒரத்தநாடு உள்ளிட்ட 6 இடங்களில் புதிய சுரங்கங்கள் அமைக்க ஒன்றிய பாஜ அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது டெல்டாவை அழிக்கின்ற ஒரு மிகப்பெரிய சூழ்ச்சி. எனவே, இதை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம். இதுதொடர்பாக சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சுரங்கங்கள் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று அறிவிப்பு வெளியிட வேண்டும். தமிழ்நாட்டின் டெல்டாவை அழிக்கும் ஒன்றிய பாஜ அரசின் இந்த சுரங்கங்கள் அமைக்கும் திட்டத்திற்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, இதை கண்டித்து போராட்டங்கள் நடத்தும். இவ்வாறு அன்புமணி கூறினார்.

Related posts

காவலர் உயிரிழப்பு: முதல்வர் இரங்கல்

பெங்களூருவில் பெய்த கனமழை காரணமாக 10 விமானங்கள் சென்னையில் தரையிறங்கின

சாயம் வெளுத்தது