நத்தம்-துவரங்குறிச்சி வழித்தடத்தில் மகளிர் இலவச பயணத்திற்கு புதிய அரசு டவுன் பஸ் இயக்கம்

*முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு

நத்தம் : நத்தத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை உள்ளது. இது மதுரை கோட்டம், திண்டுக்கல் மண்டலத்தில் உள்ளது. இங்கு நகரப்பேருந்து 20, தொலை தூரப் பேருந்து 17, மாற்றுப் பேருந்து அல்லது சிறப்பு பேருந்து பயன்பாட்டிற்காக 5, ஆக மொத்தம் 42 பேருந்துகள் உள்ளன. இங்கிருந்து மதுரை, திண்டுக்கல், திருச்செந்தூர், நாகூர் போன்ற வெளி ஊர்களுக்கும் அருகிலுள்ள செந்துறை, திருமலைக்கேணி, துவரங்குறிச்சி, சிலுவத்தூர், வி.எஸ். கோட்டை, சிங்கம்புணரி, மங்களாம்பட்டி, கருங்காலக்குடி போன்ற சுற்றுவட்டார பகுதிகளுக்கு நகரப் பேருந்தும் இயக்கப்பட்டு வருகிறது.

இதில் ஒரு சில பேருந்துகள் மழைக்கு ஒழுகும் நிலையிலும், கட்டுமானங்கள் தளர்ந்த நிலையிலும் இருந்து வந்தது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இந்நிலையில் நத்தம் பணிமனைக்கு புதியதாக 5 பேருந்துகள் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று முதன்முதலாக நத்தத்திலிருந்து துவரங்குறிச்சிக்கு மகளிர் இலவச பயணத்திற்கான பேருந்தாக புதிய பேருந்து ஒன்று நேற்று முதல் இயக்கி வைக்கப்பட்டது.

இதுகுறித்து புதிய பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கல்லூரி மாணவி சவுந்தர்யா, குடும்பத் தலைவி ராஜேஸ்வரி ஆகியோர் கூறியதாவது, தமிழ்நாடு அரசு சார்பில் மகளிர் இலவச பேருந்து பயன்பாட்டுக்கான பேருந்தை புதிய பேருந்தாக மாற்றியது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக அரசுக்கும் முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசு பேருந்துகளின் பராமரிப்பில் கவனம் செலுத்தி பொது மக்கள் பயன்பாட்டுக்கான பொதுத்துறை நிறுவனங்களின் கட்டமைப்பை எப்போதும் சீராக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு பேருந்துகளின் கால அட்டவணையை பஸ் நிலையத்தில் அந்தந்த ஊர்களுக்கு செல்லும் பிரிவில் அமைத்திட வேண்டும். இதனால் பொதுமக்களுக்கு சிரமமின்றி இருக்க வாய்ப்பாக அமையும், என்றனர்.

Related posts

நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான்

தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலம் மேடக் நகரில் பாஜக பேரணியில் இருதரப்பு மோதல்