நெல்லை வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்

நெல்லை: நெல்லை சந்திப்பு மேலவீரராகவபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோயிலில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். முன்பொரு காலத்தில் நெல்லை சுற்றுவட்டாரங்களை ஆட்சி செய்த கிருஷ்ணவர்மா என்னும் அரசனை எதிரி படைகளிடம் இருந்து வரதராஜ பெருமாள் காப்பாற்றினார். விஷ்ணு பக்தனான அரசனும், தாமிரபரணி நதிக்கரையில் வீரராகவபுரம் என்னும் ஊரை உருவாக்கி, வீரராகவ பெருமாளுக்கு ஆலயம் நிர்மாணித்தார்.

தன் நாட்டை காத்த வரதராஜ பெருமாளையே அதில் உத்ஸவராக எழுந்தருள ஆகம முறைப்படி உத்ஸவங்கள் செய்தார். நெல்லை சந்திப்பில் அன்று முதல் வீர ராகவபெருமாள், தேவி, பூதேவி சமேத அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ்வாண்டு சித்திரை திருவிழா கொடியேற்றம் கடந்த 22ம் தேதி நடந்தது. கடந்த 26ம் தேதி கருடோத்ஸவம் நடந்தது. பெருமாள் தினமும் அன்னம், சிம்ஹ, அனுமந்தம், சேஷ உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வந்தார். விழாவின் 8ம் நாளான நேற்று காலை 8 மணிக்கு வெள்ளிப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் பெருமாள் திருவீதி உலா வந்தார். இரவு 8 மணிக்கு குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடந்தது. இதையொட்டி இன்று காலை 5.15 மணி முதல் 6 மணிக்குள் பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். காலை 7 மணிக்கு திரளான பக்தர்கள் கூடி திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் துணைமேயர் ஜெகநாதன் உள்ளிட்ட அப்பகுதி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பக்தர்கள் கோவிந்தா கோபாலா என பக்தி கோஷம் முழங்க ரதவீதிகள் வழியாக தேரை இழுத்து சென்றனர். இன்று மாலை 5.30 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 8 மணிக்கு வெள்ளிப்பல்லக்கில் கிருஷ்ணன் திருக்கோலத்தில் பெருமாள் வீதிஉலாவும் நடக்கிறது. 10ம் நாள் திருவிழாவான நாளை மே 1ம் தேதி நண்பகல் 12 மணிக்கு தாமிரபரணி நதியில் தேவிகள் சமேத வரதராஜ பெருமாளுக்கு தீர்த்தவாரி நடக்கிறது.

Related posts

நெல்லை, தூத்துக்குடியில் மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை; 5 ஆயிரம் படகுகள் கடற்கரையில் நிறுத்தம்

ஊட்டி தாவரவியல் பூங்கா: மலர் கண்காட்சியில் புதிய அலங்காரம்

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு