நீட்டை பொறுத்தவரை தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைகளுக்கே சாதகம்: ஆயிரம்விளக்கு எம்.எல்.ஏ.எழிலன் குற்றச்சாட்டு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் நேற்று, ஆயிரம்விளக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும், திட்டக்குழு உறுப்பினருமான டாக்டர் எழிலன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு 200 கேள்விகள் 800 மதிப்பெண்கள் என ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் வீதம் அளிக்கப்பட்டு தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் மைனஸ் மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளப்படும். முதல்நிலை மருத்துவ நீட் தேர்வில் ஒன்றிய அரசு ஜீரோ சதவிகித முறையை கொண்டு வந்த பிறகு, ஜீரோ சதவீதம் பெற்றவரும் மருத்துவராகலாம் என்பது மட்டுமின்றி, அந்த தேர்வில் மைனஸ் 200 மதிப்பெண் பெற்றால் கூட மருத்துவராகலாம் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது ஜீரோ மதிப்பெண்ணை விட குறைவானது இது.

காலி இடங்களை நிரப்ப இதுபோன்று செய்வதாக கூறுகின்றனர். முதுநிலை மருத்துவ படிப்பில் 1 லட்சத்து 20 ஆயிரம் இடங்கள் உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் அது தவறு, அதில் 65 ஆயிரம் இடங்கள் மட்டுமே உள்ளன. இந்த 1 லட்சத்து 20 ஆயிரம் இடங்களும் காலி இடங்கள் என ஒன்றிய சுகாதாரத்துறை கூறுகிறது. ஆனால் கடந்த ஆண்டு முதுகலை படிப்பில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் இருந்தது 4 ஆயிரம் இடங்கள் மட்டுமே. அரசு மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு விட்டன. ஆனால், தனியார் நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் உள்ள இடங்கள் மட்டுமே நிரப்பப்படாமல் இருந்தன.

இந்த காலி இடங்களை நிரப்ப எந்த மதிப்பெண் எடுத்தாலும் பரவாயில்லை என இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளனர். அடிப்படையிலே தகுதியான மருத்துவர்களுக்கு எதிராக நீட் செயல்படுகிறது. இது மருத்துவ தரத்தை உயர்த்துமா? இந்த அறிவிப்பு மூலம் பலரும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் சீட்டை புரோக்கர்கள் வைத்து பிளாக் பண்ணி வைத்து விட்டனர். நீட் என்பது தரம் உயர்த்துவதற்கான தேர்வு இல்லை என்பதை இந்த கமிட்டி காட்டி விட்டது. நீட்டை பொறுத்தவரை இளநிலை மற்றும் முதுநிலை என அனைத்தும் தனியார், நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்குதான் சாதகமாக உள்ளது. அரசு கல்லூரிகளுக்கு விளிம்பு நிலை மக்களை வர விடாமல் தடுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

நடுரோட்டில் டான்ஸ் ஆடி பஸ்சுக்கு கிக் கொடுத்த போதை ஆசாமி கால் உடைந்தது

துணி காயவைத்த போது மின்சாரம் பாய்ந்து தம்பதி பரிதாப பலி

சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலரின் கணவர் கைது