நீட் தேர்வுக்கு தயாரான மாணவியிடம் சென்னை போலீஸ்காரர் சில்மிஷம்: தட்டிக்கேட்ட பெற்றோர் மீது சரமாரி தாக்குதல்

திருப்பத்தூர்: நீட் தேர்வுக்கு தயாரான மாணவியிடம் சென்னை போலீஸ்காரர், அவரது சகோதரர் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இதை தட்டிக்கேட்ட தடுத்த பெற்றோர் மீது சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு அடுத்த புதூர் பகுதியை சேர்ந்தவர் ரவி (66). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை (65). இவர்களது மூத்த மகன் கோதண்டன் (33). இவர் சென்னையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இளைய மகன் மோகன்குமார் (30). இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார். கோதண்டன் மற்றும் அவரது தம்பி மோகன்குமார் ஆகிய இருவரும் அதே பகுதியில் உள்ள உறவினர் குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களது மகளான 18 வயதாகும் மாணவி நீட் தேர்வு எழுத பயிற்சி வகுப்பு சென்று தயாராகி வந்த நிலையில், அவரிடமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதேபோல் நேற்று முன்தினம் இரவும் கோதண்டன், அவரது தம்பி மோகன்குமார் ஆகிய இருவரும் உறவினரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த மாணவியிடம் தகராறு செய்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த மாணவியின் தந்தை இருவரையும் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த கோதண்டன் மற்றும் மோகன் குமார் ஆகிய இருவரும் மாணவி, அவரது தந்தையை சரமாரியாக தாக்கினர். இதனை தடுக்க வந்த மாணவியின் தாயையும் தாக்கி உள்ளனர். மேலும் தட்டிக்கேட்ட தாய் மணிமேகலையையும் கோதண்டன், மோகன்குமார் ஆகியோர் தாக்கினார்களாம். இதில் படுகாயமடைந்த மாணவி உட்பட 4 பேரையும், அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாணவியின் தாய் குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீட் தேர்வு எழுத முடியாததால் கவலை
மாணவி போலீசில் கூறுகையில், ‘நான் நீட் தேர்வுக்காக தயாராகி வந்தேன். இவர்களால் எனது நீட் எக்ஸாம் கனவு தகர்ந்தது. மேலும் இன்று(நேற்று) ராணிப்பேட்டை மாவட்டத்தில் எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள சென்டரில் தேர்வு எழுதிருக்க வேண்டும். அதை அனைத்தையும் கோதண்டன் மற்றும் அவருடைய தம்பி மோகன்குமார் சீர்குலைத்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Related posts

சென்னை அண்ணா நகரில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு சார் பதிவாளர் தற்கொலை முயற்சி

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயார் செய்ய டெண்டர்