நாங்குநேரி மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்ய சிறப்பு ஏற்பாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் முனியாண்டி என்பவரது மகன் சின்னதுரை (வயது 17) வள்ளியூரில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவரது மகள் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவன் சின்னதுரை படிக்கும் பள்ளியில் பயிலும் சில சக மாணவர்கள் அவர் மீது சாதிய ரீதியாக பாகுபாடு காட்டி துன்புறுத்தியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த சின்னத்துரை பள்ளி செல்ல மறுத்து வீட்டில் இருந்துள்ளார். இந்த விவரம் அறிந்த ஆசிரியர் சாதிய ரீதியில் பாகுபாடு காட்டிய சக மாணவர்களை கண்டித்துள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த குறிப்பிட்ட மாணவர்கள் சின்னதுரையை பழிவாங்க எண்ணி மாணவன் வீட்டுக்கே சென்று மாணவனை அறிவாளால் பல இடங்களில் வெட்டி உள்ளனர்.

அதனை தடுக்க சென்ற அவரது தங்கையையும் அந்த கும்பல் வெட்டி உள்ளது. தற்பொழுது, இருவரும் அரிவாள் வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், அரிவாளால் வெட்டுப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மாணவரை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் நேரில் சென்று சந்தித்து ஆதரவு கூறியுள்ளார். மாணவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளார்.

இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மா.சுப்பிரமணியன், “இந்த சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியில் மரணம் அடைந்தவருக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையை பொருத்தவரை விரைந்து செயல்பட்டு 6 குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் திருநெல்வேலி மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் அந்த சிறுவனுக்கு மிகச் சரியான சிகிச்சை செய்யப்பட்டிருந்தாலும், கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைப் பொருத்தமாக இருக்கும் என்கிற கருத்தை தெரிவித்தார்கள்.

இங்கிருந்து அந்த சிறுவனை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை காட்டிலும், ஸ்டான்லி சிறப்பு மருத்துவர்களை திருநெல்வேலிக்கு வரவழைத்து, ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் இங்கே தங்கி இருந்து, சிறுவனுக்கு தேவையான அறுவை சிகிச்சையை, இங்கே இருக்கிற மருத்துவர்களோடு இணைந்து செய்வது என்று முடிவெடுத்து, இப்போது ஸ்டான்லி மருத்துவர்கள் இடத்திலும் பேசப்பட்டு இருக்கிறது.

இந்த மருத்துவமனையின் முதல்வர் அவர்கள், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பாலாஜியிடம் பேசி இருக்கிறார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் இவர்கள் எப்பொழுது தேவை என்று சொல்கிறார்களோ அப்பொழுது சென்னை ஸ்டான்லியில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் இங்கே வந்து சிறுவனுக்குரிய சிகிச்சைகளை செய்வார்கள் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டான்லி மருத்துவர்களைப் பொறுத்தவரை, கையை ஒட்ட வைக்கும் அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர்கள். எனவே அந்த சிறப்பு மருத்துவர்கள் இங்கே வரவழைக்கப்பட்டு, நெல்லையிலே தங்கி இருந்து சிறுவனுக்குரிய சிகிச்சைகளை செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாது தமிழக முதலமைச்சர் அவர்கள் நீதியரசர் திரு.கே.சந்துரு அவர்களின் தலைமையில் ஒரு நபர் ஆணையம் ஒன்றையும் அமைத்து, அந்த ஆணையத்தின் வழியாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சூழ்நிலையும் ஏற்படுத்தி இருக்கிறார்

அந்த குழந்தைகளின் தாயிடத்தில் பேசி இருக்கிறோம். அவரும் எங்களிடத்தில் ஒரு மனு ஒன்றை தந்திருக்கிறார். இரண்டு பேரும் குணமடைந்து வீட்டிற்கு வரும்போது அவர்களுக்கு ஏதாவது வேலை வாய்ப்பை அரசு சார்பில் ஏற்படுத்தி தரும் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள்

சிறுவனைப் பொருத்தவரை 17 வயது மட்டுமே ஆகிறது. 18 வயது நிரம்பினால் தான் வேலை வாய்ப்புக்கு அரசு பரிசீலிக்கும். அந்த வகையில் அவரிடத்தில் நாங்களும் சொல்லி இருக்கிறோம். அவருக்குரிய அந்த வயதை நிரம்பியவுடன் நிச்சயம் அரசின் சார்பில் முதலமைச்சர் அமைச்சரின் வழிகாட்டுதலில் மக்கள் நல்வாழ்வுத் துறையில் ஏதாவது ஒரு வேலையை வாங்கி தருவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இருவரும் குணமடைந்த உடன் ஒரு நல்ல பள்ளியில் சேர்த்து, அவர்களை பாதுகாப்பாக படிப்பை தொடர்வதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் சொல்லி இருக்கிறார். அந்த வகையில், அவர்கள் இருவரும் குணமடைந்து வந்தவுடன் அவர்களுக்குத் தேவையான கல்வியைத் தொடர்வதற்கும் அந்த அரசு துணை நிற்கிறது” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Related posts

4வது சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி தொடர் பின்னடைவு : பாஜக தொண்டர்கள் அதிர்ச்சி

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலை

மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் தொடர்ந்து முன்னிலை