நாகைக்கு பெருமை சேர்த்த நெதர்லாந்து நாட்டு நாணயம்

நாகை: தமிழ்நாட்டின் அழகிய கடற்கரை நகரங்களில் நாகை மாவட்டமும் ஒன்றாகும். இந்த நகரம் வரலாற்று ரீதியாகவும், தற்காலத்திலும் பெருமைப்பட வேண்டிய பல விஷயங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. நாகையின் மகத்துவம் பற்றி பெரும்பாலான தமிழர்கள் கூட அதிகம் அறிந்திருக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் ஊர் என்பதே நாகை பற்றி பலர் அறிந்துள்ள செய்தியாகும். நாகைக்கு பெருமை சேர்க்கக்கூடிய பல வரலாறுகள் உள்ளன. அதில் ஒன்று நெதர்லாந்து நாட்டு நாணயம்.

நெதர்லாந்து நாணயத்தில் நாகப்பட்டினம் என தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட்டு பல நூற்றாண்டுகளாக மக்கள் தங்கள் நிதி பரிவர்த்தனைகளுக்காக புழக்கத்தில் இருந்துள்ளது. மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் அரசர்கள் தங்களது பெயரை கொண்ட நாணயங்களை வெளியிட்டனர். வரலாற்றில் ஊரின் பெயருடன் நாணயங்கள் வெளியிடப்பட்டது நாகை மட்டும் தான். நாகைக்கு இந்தப் பெருமை கிடைத்துள்ளது. கிபி 1680ல் டச்சுக்காரர்கள் நாகையை போர்ச்சுகீசியர்களிடமிருந்து கைப்பற்றினர். பின்னர் 100 ஆண்டுகள் டச்சுக்காரர்கள் (நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள்) நாகையை ஆட்சி செய்தனர். நாகையின் பொற்காலங்களில் இதுவும் ஒன்று.

டச்சுக்காரர்கள் நாகையில் ஒரு காசு தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவினர். அதில் நான்கு வகையான நாணயங்களை அச்சடித்து வெளியிட்டனர். இந்த நாணயங்கள் தமிழ்நாடு, இலங்கை மற்றும் இந்தோனேசியாவில் பயன்படுத்தப்பட்டன. அவர்கள் அச்சடித்த நாணயம் நாகப்பட்டினம் பணம் என்று அழைக்கப்பட்டன. நாகப்பட்டினம் என நாணயங்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதுவும் தமிழ் எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தெற்காசியாவில் டச்சுக்காரர்கள் ஆட்சி செய்த இடங்களில் இந்த தமிழ் மொழியில் அச்சடித்த நாகப்பட்டினம் நாணயங்களை முழுமையாக பயன்படுத்தினர். தற்போது இந்த நாணயங்கள், நாகப்பட்டினம் அருங்காட்சியகத்தில் மட்டுமே காண முடிகிறது. நாகைக்கு இன்று பல ஆயிரம் நூற்றாண்டுகள் பெருமை சேர்க்கும் விதமாக நெதர்லாந்து நாணயங்கள் திகழும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பீகாரில் கொசாய்மட் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கடலூர் சின்னத்துரை குடும்பத்தினருக்கு 5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் வழங்கினார்