சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் முத்தமிழ், செந்தமிழ் காவலர்கள் பிறந்தநாள் விழா: தமிழறிஞர்கள் பங்கேற்பு

சென்னை: சென்னை விஐடியில் தமிழியக்கமும், சென்னை விஐடி வளாக அறிஞர் அண்ணா மன்றமும் இணைந்து, முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் 125வது பிறந்தநாள் மற்றும் செந்தமிழ் காவலர் சி.இலக்குவனார் 115வது பிறந்தநாள் விழா சென்னை விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, விஐடி பல்கலைக்கழக வேந்தர் மற்றும் நிறுவனர், தமிழியக்கத்தின் தலைவருமான கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். விழாவில், தமிழியக்கத்தின் மாநில செயலாளர் மு.சுகுமார் அனைவரையும் வரவேற்றார். தமிழியக்கத்தின் வட தமிழக ஒருங்கிணைப்பாளர் வணங்காமுடி, வேலூர் மண்டல செயலாளர் மோகன்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பொதுச்செயலாளர் அப்துல்காதர் விழா உரை நிகழ்த்தினார்.

இதில் வேந்தர் விசுவநாதன் பேசியதாவது: நாம் அனைவரும் தமிழ் குடும்பத்தை சார்ந்தவர்கள்தான். ஆசிரியர்களால்தான் பல மாற்றங்களை செய்ய முடியும். பெற்றோர்களுக்கு அடுத்து ஆசிரியர்கள்தான். கி.ஆ.பெ.விசுவநாதம், இலக்குவனார் இருவரும் தமிழர்களுக்காக தங்கள் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தனர். உலகத்தில் 3 ஆயிரம் ஆண்டுகளை கடந்த மொழி 7 மொழிகளாகும். அவற்றில் இந்தியாவைச் சேர்ந்த மொழிகள் தமிழ், சமஸ்கிருதம். அவற்றில் 140 கோடிக்கு மேல் மக்கள் வசிக்கும் இந்தியாவில் வெறும் 22 ஆயிரம் பேர் மட்டுமே சமஸ்கிருதத்தை பயன்படுத்துகின்றனர். இன்று உலகளவில் பல்வேறு நாடுகளில் தமிழ்மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்களாக வரப் போகிறவர்கள். எனவே, அடுத்த தலைமுறைக்கு தமிழ் மொழியின் சிறப்புகளை எடுத்துரைக்க வேண்டும். வருங்கால சந்ததியினர் தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறு பேசினார். விழாப்பேருரையில் தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் இ.சுந்தரமூர்த்தி பேசுகையில் “மறைந்த முதல்வர் எம்ஜிஆரிடம் தமிழ் பல்கலைக்கழகத்தை நிறுவ வலியுறுத்திய கி.ஆ.பெ.விசுவநாதம், அதே தமிழ் பல்கலைக்கழகம் முன்பு தமிழ் அகராதியில் வட சொற்கள் கலைப்பை எதிர்த்து போராடினார். இது அவருடைய தமிழ் உணர்வை வெளிப்படுத்துறது. இலக்குவனார் போராட்ட குணம் மற்றும் நேர்மையாளராக திகழ்ந்தது மட்டுமின்றி, தன்னுடைய மாணவர்களை தமிழ் போராளிகளாக உருவாக்கினார்’’ என்றார்.

இதில் உலக திருக்குறள் இணைய கல்வி கழகத்தின் இயக்குநர் மறைமலை இலக்குவனார், கி.ஆ.பெ.விசுவநாதம் பெயர்த்தி மனநல அறிவுரைஞர் வெற்றிசெல்வி ஆகியோர் நெகிழ்வுரை நிகழ்த்தினர். விழாவின் நிறைவாக தமிழியக்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ம.சுந்தரமூர்த்தி நன்றியுரை நிகழ்த்தினார். விழாவில், விஐடியின் துணை வேந்தர் (பொறுப்பு) வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், வேந்தரின் ஆலோசகர் தியாகராஜன் மற்றும் சென்னை விஐடியின் கூடுதல் பதிவாளர் மனோகரன், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

Related posts

குமரி மாவட்டத்தில் உணவு, காய்கறி கழிவில் இருந்து எரிவாயு தயாரிப்பு

110 ஆண்டுகளை கடந்த மண்டபம் ரயில் நிலையம் தரம் உயர்த்தப்படுமா?

ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்!