பஞ்சமி நிலம் குறித்து பேசியதற்காக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது : ஐகோர்ட் அதிரடி

சென்னை: பஞ்சமி நிலம் குறித்து பேசியதற்காக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மீது முரசொலி அறக்கட்டளை தரப்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என குற்றம்சாட்டி, தமிழ்நாடு பாஜ செயலாளர் சீனிவாசன் என்பவர் தேசிய பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இது குறித்து, கடந்த 2019ல் வேலூரில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசியதாக தமிழக பாஜவின் அப்போதைய தலைவர் எல்.முருகன் மீது முரசொலி அறக்கட்டளை தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கு சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தி்ல் நிலுவையில் உள்ளது. இதனிடையே இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

மேற்கண்ட வழக்கில் தீர்ப்பு வழஙகிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,”பஞ்சமி நிலம் குறித்து பேசியதற்காக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மீது முரசொலி அறக்கட்டளை தரப்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம்.எல்.முருகன் மீதான வழக்கு விசாரணையை 3 மாதங்களில் முடிக்க உத்தரவிடப்படுகிறது,”என்று தெரிவித்தார்.

Related posts

புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி

57 பவுன் நகை கொள்ளையடித்த சிறை ஏட்டு உட்பட 6 பேர் கைது

ஒன்றிய பட்ஜெட்: அமைச்சர் ஆலோசனை