கொலை, கொள்ளை தடயங்களை அழிக்க முயற்சியா? கொடநாடு எஸ்டேட்டில் 20 பேர் சிறப்பு குழு ஆய்வு: நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வருவதால் பரபரப்பு

கோத்தகிரி: கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை தடயங்களை அழிக்க முயற்சித்தாக அளிக்கப்பட்ட புகாரில், கொடநாடு எஸ்டேட்டில் 20 பேர் சிறப்பு குழு நேற்று ஆய்வு செய்தது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் உள்ள ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தது. இதுதொடர்பாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உட்பட கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டனர்.

இதில், கனகராஜ் விபத்தில் பலியானார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் என்பவர், கொடநாடு பங்களாவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தடயங்களை அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதால் நீதிமன்றத்தின் சார்பில் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு பதிலளிக்குமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அப்போது நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார், தடயவியல் துறையினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின் துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் கொடநாடு பங்களாவிற்கு ஆய்வு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என சிபிசிஐடி தரப்பில் மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கொடநாடு பங்களாவை ஆய்வு செய்து வீடியோ பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நேற்று சிபிசிஐடி. எஸ்.பி. மாதவன் தலைமையில் விசாரணை அதிகாரி ஏ.டி.எஸ்.பி. முருகவேல், புலனாய்வு அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள், மின் துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் என 20 பேர் கொண்ட குழுவினர் எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கொலை, கொள்ளை நடைபெற்ற இடத்தில் சம்பவம் நடந்த போதும், தற்போதும் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது என 3 மணி நேரத்திற்கும் மேல் முழுமையாக ஆய்வு நடத்தினர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று ஊட்டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது ஆய்வு தொடர்பாக சிபிசிஐடி சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Related posts

அரசு பள்ளிகளில் 6890 ஹைடெக் லேப் நிர்வாகிகள் நியமனம்; பணிகளை வரையறை செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அதிமுக தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் ஒன்றிணைந்து செயல்பட சசிகலா அழைப்பு

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்வரலாற்று வெற்றிக்காக முழு பலத்துடன் களம் இறங்கிய திமுக: தோல்வி பயத்தில் ஒதுங்கியதா அதிமுக? பாஜவுக்கு பலமில்லாததால் பாமக போட்டி