முதுகுளத்தூர் பகுதியில் தொடர் திருட்டால் பொதுமக்கள் பீதி

 

சாயல்குடி, ஏப்.25: முதுகுளத்தூர் தெருக்களில் இருச்சக்கர வாகனம் திருட்டு உள்ளிட்டவை தொடர்ச்சியாக நடந்து வருவதால் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த எஸ்.பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. நகரப்பகுதி என்பதால் அனைத்து தரப்பு மக்களும் வாழ்ந்து வருகின்றனர். நூற்றிற்கும் மேற்பட்ட கடைகள், ஐந்திற்கும் மேற்பட்ட வங்கிகள், தங்க நகை அடமானம், நிதி நிறுவனங்கள், அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் உள்ளன. இங்கு முக்கிய தெருக்களாக செல்லியம்மன்கோயில் தெரு, மருத்துவமனை தெரு, மறவர் தெரு, முகமதியார் தெரு, கிழக்கு தெரு, திடல் தெரு, வடக்கூர், வாகைக்குளம் உள்ளிட்டவை உள்ளது. இப்பகுதியில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர்கள் வீடுகளை நோட்டமிட்டு வருவதாக குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடல் தெருவிலுள்ள மாதவனின் இருச்சக்கர வாகனம், மருத்துவமனை தெரு ராஜமார்த்தாண்டனின் இருச்சக்கர வாகனத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

இது குறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே நாள் இரவில் இரண்டு வாகனங்கள் திருடு போன சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மேலும் இருசக்கர வாகனம் திருட்டு கடந்த சில நாட்களாக நடந்து வருவதால் தெருக்களை காக்கும் பணியில் இளைஞர்கள் இரவில் தூங்காமல் காவல் காத்து வருவதாக கூறுகின்றனர். எனவே எஸ்.பி தங்கத்துரை முதுகுளத்தூர் நகரில் போலீஸ் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதுகுளத்தூர் நகர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related posts

கடவூர், தோகைமலை பகுதியில் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

வேலாயுதம்பாளையத்தில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி

கரூர் சுங்ககேட் அருகே அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து சாவு