திரு.வி.க. நகர் தொகுதி அரசு நெஞ்சக நோய் மருத்துவமனைக்கு புதிய கட்டிடம்: பேரவையில் தாயகம் கவி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

சென்னை: திரு.வி.க. நகர் தொகுதி அரசு நெஞ்சக நோய் மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று சட்டசபையில் தாயகம் கவி எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது திரு.வி.க. நகர் எம்எல்ஏ ப.தாயகம் கவி (திமுக) பேசுகையில், ”திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதி ஓட்டேரி பகுதியில் 75 ஆண்டு காலத்திற்கு முன் கட்டப்பட்ட மிகவும் பழமையான அரசு திருவெற்றீஸ்வரர் நெஞ்சக நோய் மருத்துவமனை இருக்கிறது. மிகவும் பழுதடைந்த நிலையில் இருக்கிற மருத்துவமனை கட்டிடத்திற்கு மாற்றாக படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் ஒன்று கட்டித்தர அமைச்சர் ஆவன செய்வாரா?” என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ”முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி 2025க்குள் காச நோய் இல்லாத தமிழகம் என்கிற இலக்கினை அடைகிற வகையில் காசநோய்க்கான சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவுகள் ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவியின் கோரிக்கையை ஏற்று ஓட்டேரி பகுதியில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் புதிய கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு முன்னுரிமை தந்து அதுதொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும்” என்றார்.

Related posts

விருப்பமுள்ள சிறைவாசிகளின் விவரங்கள் சேகரிப்பு அதிகாரிகள் தகவல் திருச்சி அரசு ஐடிஐயில் சேர

தொழிலாளியை தாக்கிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் கைது

தேங்காய் பருப்பு ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து