அரிசிக்கொம்பன் நடமாட்டம் எதிரொலி: கம்பம் நகராட்சியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து கோட்டாட்சியர் ஆணை..!!

தேனி: தேனி கம்பம் நகராட்சியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தமபாளையம் கோட்டாட்சியர் பால்பாண்டி ஆணையிட்டுள்ளார். கேரளாவின் இடுக்கி மாவட்டம் ராஜ காடு அருகே சின்னக்கள் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக காட்டில் சுற்றி திரிந்த அரிசிக்கொம்பன் யானை கடந்த ஏப்ரல் 6ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

அன்றைய தினம் இரவே அரிசி கொம்பனை பெரியார் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட கண்ணகிகோட்ட வனப்பகுதியில் கேரளா வனத்துறையினர் விட்டனர். மேலும் அதன் நடமாட்டத்தை கண்காணிக்க கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டது. கேரள வனப்பகுதியில் விடப்பட்ட அரிசி கொம்பன் சில நாட்களில் தமிழ்நாட்டின் ஸ்ரீ வில்லிப்புத்தூர், மேகமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட இரவங்கலாறு வனப்பகுதியில் நுழைந்தது.

இதனால் பொதுமக்கள் மேகமலைக்கு சுற்றுலா செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இந்த நிலையில் அரிசி கொம்பன் யானை மீண்டும் இடம் பெயர்ந்து கேரள வனப்பகுதிக்கு சென்றது. மீண்டும் தமிழ்நாட்டு எல்லைக்குள் புகுந்த அரிசிக்கொம்பன் கூடலூர் வழியாக கம்பம் நகருக்குள் புகுந்து குடியிருப்பு பகுதிகளில் உலாவி வருவதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

கம்பத்தில் அரிசிக்கொம்பன் யானை நடமாடும் நிலையில் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தடுக்க 144 தடை பிறப்பிக்கப்படுகிறது. 10 பேரை பலி கொண்ட அரிசிக்கொம்பன் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அரிசிக்கொம்பன் நடமாட்டத்தால் கம்பத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி யானைகள் முகாமில் இருந்து 2 கும்கி யானைகளை வரவழைக்கவும் வனத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லண்டனில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய மாணவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!!

உலகின் தலைசிறந்த நிறுவனங்களின் பட்டியலில், முதல் 100 இடங்களுக்குள் இந்தியாவைச் சேர்ந்த 4 நிறுவனங்கள்

பாக்கெட் சைஸ் அரசியல் சாசன புத்தகத்தின் விற்பனை அதிகரிப்பு: EBC தகவல்