பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ.7.5 கோடியில் வடிகால் தூர்வாரும் பணி

* 1480 கி.மீ. தூர பணிகளை ஜூன் மாதம் முடிக்க திட்டம்
* கூவம், அடையாறு ஆற்றுக்கு முன்னுரிமை
* 4000 சாலைப் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்

சிறப்பு செய்தி
சென்னையில் உள்ள மழைநீர் வடிகால், நீர்நிலைகள், ஆறுகளை தூர்வாருவதற்காக ₹7.5 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையில் எப்போதெல்லாம் மழை பெய்கிறதோ அப்போதெல்லாம் சாலைகள் வெள்ளத்தில் மிதப்பது வழக்கம். அதுவும் பருவமழை காலங்கள், புயல் நேரங்களில் சொல்லவே வேண்டாம் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கும் என்ற அச்சம் இருக்கும். சென்னையின் வெள்ள பாதிப்புகளை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தாலும் மழை சமயங்களில் ஏற்படும் இயற்கை பேரிடர்களை முழுமையாக கட்டுப்படுத்த முடிவதில்லை.

இந்த பாதிப்புகளை தடுக்க நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் மழை நீர் வடிகால்களை தூர்வாருதல், ஆறு, ஏரி மற்றும் குளங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நீர்நிலைகள் தூர்வாருதல், ஆகாயத்தாமரை அகற்றுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்க்கொள்ளும் வகையில் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணியை நீர்வளத்துறையுடன் இணைந்து சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. அதன்படி சென்னையில் பாய்கின்ற அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் மற்றும் மாம்பலம் கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாருவதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா ₹50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்: தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்க்கொள்ளும் நோக்கில் நீர்நிலைகள், கால்வாய்கள் மற்றும் மழைநீர்வடிகால்களை தூர்வாருதல், ஆகாயதாமரை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை தொடங்கப்பட்டுள்ளது. 4000 சாலை பணியாளர்கள் கொண்டு 1480 கிமீ நீளமுள்ள மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி நடைபெறுகிறது. இதற்காக 15 மண்டலங்களுக்கு தலா ₹50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள ஆம்பிபியன்ஸ், ரோபோடிக் எக்ஸ் க்வேட்டர் மற்றும் மினி ஆம்பிபியன்ஸ் போன்ற நவீன இயந்திரங்களை கொண்டு தூர்வாரும் பணி நடைபெறுகிறது. ஜூன் 30ம் தேதிக்குள் முதற்கட்ட பணிகள் முடிக்கப்படும். வடகிழக்கு பருவமழையை எதிர்க்கொள்ள ஏதுவாக மீண்டும் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு அக்டோபருக்குள் முடிக்கப்படும்.

பொதுவாக தூர்வாரும் பணிகள் செப்டம்பர், அக்டோபர் போன்ற மாதங்களில் தொடங்கப்படும். ஆனால் இந்தாண்டும் கடந்தாண்டும் முன்கூட்டியே கோடைக்காலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் முதற்கட்ட தூர்வாரும் பணிகள் ஜூனில் முடிக்கப்படும். மேலும் 2 ரோபோட்டிக் இயந்திரங்கள் கூடுதலாக வாங்கப்பட உள்ளது. 3 வாட்டர் மாஸ்ட் போன்ற அதிநவீன இயந்திரங்களை மலேசியாவிலிருந்து வாக்குவதற்கான டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் கால்வாய், பக்கிங்காம் கால்வாய், மாம்பலம் கால்வாய், அடையாறு, கூவம் ஆற்றில் ஆகாயத்தாமரை அகற்றும் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

4 நீர்வழித்தடங்கள்
சென்னை மாநகரில் 2,624 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால்களையும், 53 கிலோ மீட்டர் நீளத்திற்கு 33 நீர்வழி கால்வாய்களையும் சென்னை மாநகராட்சி பராமரித்து வருகிறது. இந்த மழைநீர் கட்டமைப்பு மற்றும் கால்வாய்களின் வழியாக சென்னையில் ஓடும் 4 நீர்வழித்தடங்களான பக்கிங்காம் கால்வாய், அடையாறு ஆறு, கூவம் ஆறு மற்றும் கொசஸ்தலை ஆறு மூலமாக மழைநீர் கடலில் கலக்கிறது.

நவீன இயந்திரங்கள்
திறந்தவெளி கால்வாய்களை தூர்வார ரோபாட்டிக் இயந்திரம் மற்றும் நீரிலும் மற்றும் நிலத்திலும் இயங்கும் ஆம்பியன் என்ற புதிய இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக நீரிலும் மற்றும் நிலத்திலும் இயங்கும் நவீன இயந்திரம் ஒன்று பின்லாந்து நாட்டிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு: ப.சிதம்பரம் விமர்சனம்

டி20 உலகக்கோப்பை லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து