தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் வடிகால் கட்டுமான பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு: விரைந்து முடிக்க உத்தரவு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட செம்பாக்கம் மற்றும் கிழக்கு தாம்பரம் பகுதிகளில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை, கண்காணிப்பு அலுவலர் ஜான்லூயிஸ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை வெள்ள காலங்களில் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், ரூ.37.59 கோடி மதிப்பீட்டில் 12.461 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 3வது மண்டலம், 41வது வார்டு, டெல்லஸ் அவென்யூ பகுதியில் ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், 44வது வார்டுக்கு உட்பட்ட சுபாஷ் சந்திரபோஷ் தெரு, 39வது வார்டுக்கு உட்பட்ட திருமலை நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை, தாம்பரம் மாநகராட்சி கண்காணிப்பு அலுவலர் ஜான்லூயிஸ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், கிழக்கு தாம்பரம், 67வது வார்டுக்கு உட்பட்ட சரவணா நகரில் ரூ.7.02 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், 67வது வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீதேவி நகரில் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர், பணிகளை விரைவாகவும், தரமாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முடித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, கிழக்கு தாம்பரம், இரும்புலியூர் பகுதியில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை ஏரியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, தலைமை பொறியாளர் பாண்டுரங்கன், உதவி செயற்பொறியாளர்கள் அனந்தஜோதி, தங்கதுரை, உதவி, இளநிலை பொறியாளர்கள், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related posts

மோடி 3.0 அமைச்சரவை: அமித்ஷா முதல் எல்.முருகன் வரை..! யார் யாருக்கு எந்த இலாகாக்கள் ஒதுக்கீடு.? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மெரினா கடற்கரையில் திருட்டு; 2 குற்றவாளிகளை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு!

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வாட்ஸ்அப் சேனல் துவக்கம்!