மோடி பட்டப்படிப்பு சான்று விவகாரம்; அவதூறு புகாரில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக சம்மன்: முதல்வர் என்ற வார்த்தையை நீக்க கோர்ட் உத்தரவு

அகமதாபாத்: மோடி பட்டப்படிப்பு சான்று விவகாரம் தொடர்பான அவதூறு புகாரில் குற்றம்சட்டப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சி எம்பி ஆகியோர், நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை தனக்கு வழங்க உத்தரவிடக்கோரி, தலைமை தகவல் ஆணையரிடம் டெல்லி முதல்வர் அரவிந்த் ெகஜ்ரிவால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விண்ணப்பித்தார். அதை ஏற்று, அவருக்கு அச்சான்றிதழை அளிக்குமாறு குஜராத் பல்கலைக்கழகத்துக்கு தலைமை தகவல் ஆணையர் கடந்த 2016ம் ஆண்டு உத்தரவிட்டார்.

குஜராத் பல்கலைக்கழகம் தாக்கல் செய்த மனுவின் பேரில், அந்த உத்தரவுக்கு குஜராத் ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது. நிலுவையில் இருந்த அம்மனு மீது கடந்த மாதம் தீர்ப்பு அளித்த ஐகோர்ட், தலைமை தகவல் ஆணையர் உத்தரவை ரத்து செய்தது. அரவிந்த் ெகஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது. இந்த உத்தரவை தொடர்ந்து, குஜராத் பல்கலைக்கழகத்தை அரவிந்த் ெகஜ்ரிவாலும், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய்சிங்கும் விமர்சித்தனர். இதுதொடர்பாக அவர்கள் மீது குஜராத் பல்கலைக்கழக பதிவாளர் பியுஷ் படேல், அகமதாபாத்தில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

குஜராத் பல்கலைக்கழகத்தை இருவரும் அவதூறாகவும், கேலியாகவும் விமர்சித்ததால், மக்களிடையே அவநம்பிக்கை ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் கூறியிருந்தார். அந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜயேஷ்பாய் சோவாடியா, அரவிந்த் ெகஜ்ரிவாலுக்கும், சஞ்சய்சிங்குக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், ‘இருவர் மீதும் அவதூறு வழக்குக்கான முகாந்திரம் உள்ளது. எனவே மே 23ம் தேதி இருவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவால், தனிப்பட்ட அந்தஸ்தில் கருத்து தெரிவித்து இருப்பதால், வழக்கில் அவரது பெயருக்கு முன்பு உள்ள ‘முதல்வர்’ என்ற வார்த்தையை நீக்க வேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.

Related posts

பூரன் – ராகுல் அதிரடி ஆட்டம் மும்பையை வீழ்த்தியது லக்னோ

பெண் எம்.பி தாக்கப்பட்ட விவகாரம் கெஜ்ரிவால் வீட்டில் போலீஸ் விசாரணை: பொய் புகார்: வீடியோ ஆதாரம் வெளியிட்டது ஆம்ஆத்மி

சட்டத்தை தவறாக பயன்படுத்தும் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு