ரூ.34.67 கோடி செலவில் நவீன கட்டமைப்புகளுடன் திருவொற்றியூர் கடற்கரையை அழகுபடுத்தும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் கடற்கரையை ரூ.34.67 கோடி செலவில் அழகுபடுத்தும் பணியை கே.பி.சங்கர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். திருவொற்றியூர் கடற்கரை பகுதிக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து பொழுது போக்குகின்றனர். குறிப்பாக, இயற்கையான சூழலில் நடைபயிற்சி, யோகா மற்றும் விளையாட்டு ஆகியவற்றுக்கென கடற்கரை பகுதிக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

எனவே, இந்த கடற்கரை பகுதியை அழகுபடுத்த வேண்டும், என்று சட்டமன்ற கூட்டத்தில், முதல்வரிடம் கே.பி.சங்கர் எம்எல்ஏ கோரிக்கை வைத்திருந்தார். இதன்படி, திருவொற்றியூர் கடற்கரையை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மூலம் ரூ.34.67 கோடி செலவில் 1.9 கி.மீ. துாரத்திற்கு, 28 ஆயிரத்து 100 சதுர மீட்டர் பரப்பளவில் சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், குழந்தைகளுக்கான விளையாட்டு திடல், கைப்பந்து, கபடி மைதானம், குத்துசண்டை வளையம், உடற்பயிற்சி கூடம், தியான மண்டபம், சாலையோர வியாபாரிகளுக்கான தளம், சிற்பங்கள், கடைகள், சூரிய மின் விளக்குகள், கண்காணிப்பு கேமரா, ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒப்பனை அறைகள், செல்பி ஸ்பாட், நடைபாதை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு நவீன கட்டமைப்பு வசதிகளுடன் அழகுபடுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த பணிக்கான பூமி பூஜை நேற்று கே.வி.கே.குப்பம் கடற்கரையில், கவுன்சிலர் சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது. கே.பி.சங்கர் எம்எல்ஏ பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், கவுன்சிலர் பானுமதி சந்தர், திமுக நிர்வாகிகள் ராமநாதன், சைலஸ், பாலஉமாபதி, ஏகா கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related posts

சென்னை அரும்பாக்கம் பகுதியில் போதை மாத்திரை வைத்திருந்த 3 பேர் கைது!!

பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் நல்லாட்சி அமைய வாழ்த்து: ஜி.கே.வாசன்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,800க்கு விற்பனை..!!