207 மூத்த குடிமக்களுடன் அறுபடை வீடு ஆன்மிக பயணம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

 

சென்னை: மூத்த குடிமக்கள் 207 பேருடன் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். சென்னை பூங்காநகர் கந்தகோட்டம் பகுதியில் உள்ள கந்தசாமி கோயிலில், அறுபடை முருகன் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுப்பயண தொடக்க விழா நேற்று நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கொடியசைத்து சுற்றுப்பயணத்தை தொடங்கிவைத்தார். இணையதளம் மூலம் விண்ணப்பித்த 207 மூத்த குடிமக்கள் அறுபடை முருகன் திருக்கோயில்களான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலைக்கு பஸ்களில் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இவர்களுக்கு போர்வை மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கி சுற்றுப்பயணத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: அறுபடை வீடு முருகன் கோயில்களில் மட்டும் 238 பணிகள் ரூ.599.50 கோடி, அறுபடை வீடு அல்லாத 10 முருகன் கோயில்களில் 173 பணிகள் ரூ.131.97 கோடி என 411 பணிகள் ரூ.731 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. ஆடி மாதங்களில் அம்மன் கோயிலுக்கும், புரட்டாசி மாதங்களில் வைணவ கோயில்களுக்கும் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுகிறது. சீனாவில் உள்ள மானசரோவர் புனித பயணம் செல்லும் 500 நபர்களுக்கும், நேபாளத்திலுள்ள முக்திநாத் கோயிலுக்கு புனித பயணம் செல்லும் 500 நபர்களுக்கும், அரசு மானியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று ராமேஸ்வரம் – காசி ஆன்மிக பயணத்திற்கு இந்த ஆண்டு 300 பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ள நிலையில் முதற்கட்ட பயணம் ஜனவரி 31ம் தேதி தொடங்கப்பட உள்ளது.

அறுபடை வீடுகளுக்கு தனியாக செல்ல ரூ.50 ஆயிரம் வரை ஆகும். அறநிலையத்துறை ஏற்பாட்டில் ரூ. 15,830 செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி 1000 மூத்த குடிமக்களை அழைத்துச் சென்று வர ஆகும் செலவினம் ரூ.1,58,30,000 ஆகும். இந்த தொகை முழுவதும் அரசு மானியமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

துபாயில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு தரக் கோரி மனைவி, மகன் ஆட்சியரிடம் மனு..!!

வெயிலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு 3 மணி நேரம் கட்டாயம் ஓய்வு வழங்க வேண்டும் :டெல்லி துணை நிலை ஆளுநர் உத்தரவு!!

லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளர், ஆய்வாளர் கைது..!!