மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் கணக்கை தொடங்குவோம் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி!!

சென்னை : மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் கணக்கை தொடங்குவோம் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டியில், “தென்னிந்தியாவில் உள்ள 4 மாநிலங்களில் காங்கிரஸை விட பாஜக அதிகளவு மக்களவை தொகுதிகளை வெல்லும். மக்களவைத் தேர்தலுக்காக பாஜக சிறப்பான உழைப்பை வழங்கியதால் நிச்சயம் தமிழ்நாட்டில் வெற்றி பெறுவோம். எத்தனை இடங்களை பாஜக கைப்பற்றும் என்பதை இப்போதே கூற இயலாது. தமிழ்நாட்டில் கடினமான போட்டி நிலவுவதால் எத்தனை தொகுதியில் வெற்றி பெறுவோம் என்பதை கணிப்பது கடினம்,”இவ்வாறு கூறினார்.

இதனிடையே மக்களவைத் தேர்தலுக்கு சில நாட்கள் முன்பாக கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமித்ஷா, “முதல்முறை சம்மன் வழங்கப்பட்ட போதே கெஜ்ரிவால் ஆஜராகி இருந்தால், 6 மாதங்களுக்கு முன்பே கைதாகி இருப்பார். ED பலமுறை சம்மன் அனுப்பிய போது, விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்தவர் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்,”இவ்வாறு பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து அமித் ஷா அளித்த பேட்டிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பதிலில்,”தமிழ்நாட்டில் கணக்கைத் தொடங்குவோம் என அமித்ஷா கூறுவது பகல் கனவாக இருக்கும்.

தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறாது. தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக இடையே 2வது இடத்திற்கு போட்டி நிலவுகிறது,”இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டு மக்கள் பாஜகவிற்கு இடம் தர மாட்டார்கள். பாஜகவை மக்கள் ஏற்கவில்லை என்பது ஜூன் 4ம் தேதி தெரியும். தமிழ்நாட்டில் பாஜகவிற்கு 1-2 % வாக்குகள் அதிகரிக்கலாம்,”என்றார். பீட்டர் அல்போன்ஸ் அளித்த பேட்டியில்,”தமிழ்நாட்டில் மோடிக்கு எதிரான அலை வீசியதை அனைவரும் அறிவோம். அமித்ஷாவின் நம்பிக்கை தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகம் எழுப்புகிறது. தென்னிந்தியாவில் பாஜகவிற்கு சாதகமான சூழல் இல்லை. தேர்தல் நேர்மையாக நடந்தால் பாஜகவால் வெற்றி பெற முடியாது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எச்சில் துப்ப முயன்றபோது விபரீதம் பஸ் ஜன்னலில் சிக்கிய பெண் தலை: வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

மலேசியாவில் காவல் நிலையத்தில் தீவிரவாத தாக்குதல்: 2 போலீசார் உட்பட 3 பேர் பலி

வாத்து, கோழிகளுக்கு பறவை காய்ச்சல் கேரளாவில் 13 ஆயிரம் பறவைகளை கொல்ல முடிவு