அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிபிசிஐடி மற்றும் சிபிஐ விசாரணை செய்தும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படாததால் இதனை மாநில காவல்துறை விசாரிக்க வேண்டும் என்று கே.என்.நேருவின் மற்ற சகோதரர் ஆன ரவிச்சந்திரன் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு இறுதியில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தூத்துக்குடி எஸ்.பியாக இருந்த ஜெயக்குமார் தலைமையில் ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது. அந்த குழுவில் சிபிஐ அதிகாரிகள் உள்ளிட்டோரும் இடம்பெற்றிருந்தனர். சிறப்பு புலனாய்வு குழு வழக்கை விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கொலை நடந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்டன; பல அமைப்புகள் விசாரித்துவிட்டன என நீதிபதி ஜெயசந்திரன் தெரிவித்தார். நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது ரவிசந்திரன் தலைமையில் ஆஜரான வழக்கறிஞர் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் திருப்தி அளிப்பதாகவும், நியாயம் கிடைக்கும் என நம்புகிறதாகவும் மனுதாரர் ரவிசந்திரன் தரப்பில் தெரிவித்தனர். அரசு தரப்பில் இதுவரை 1,040 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டிருப்பதாகவும், சாட்சிகள் குறிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி இந்த வழக்கை முடித்து வைக்க உத்தரவிட்டுள்ளார். தற்போது நீதிமன்ற உத்தரவுபடி அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு அதன் விசாரணையை முடித்து விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தார்.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்