கோடை காலத்தில் கறவை மாடுகளுக்கு தாது உப்பு தண்ணீர் கொடுக்க வேண்டும்: தமிழக அரசு அதிகாரி அறிவுறுத்தல்

சென்னை: கோடை காலத்தில் கறவை மாடுகளின் வெப்ப அயற்சியின் சோர்வை போக்க தாது உப்பு கலந்த தண்ணீரை கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தி கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போதைய கோடை காலத்தில் வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை கூடுதலாக காணப்படுவதால் கறவை மாடுகளுக்கு வெப்ப அயற்சியின் காரணமாக தீவனம் உட்கொள்ளும் திறன் குறைந்து அவற்றின் பால் உற்பத்தி பெருமளவு குறைய வாய்ப்புள்ளது.

எனவே, கறவை மாடுகளின் உற்பத்தி திறனை பாதுகாத்திட உரிய பராமரிப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சூரிய ஒளியின் நேரடி தாக்கத்தில் இருந்து பாதுகாத்திட கறவை மாடுகளை பகற்பொழுதில் நல்ல காற்றோட்டமான கொட்டகையிலும் அல்லது மரத்தடி நிழலில் இருக்குமாறு செய்ய வேண்டும். மாடுகள் தண்ணீர் அருந்தும் குடிநீர் தொட்டிகளை நிழலில் இருக்குமாறும் அதில் எப்பொழுதும் தூய்மையான தண்ணீர் குடிக்க கிடைக்குமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வெப்ப அயற்சியின் சோர்வை போக்க தாது உப்பு கலந்த தண்ணீரை கொடுப்பது நன்று. நிறைமாத சினையாக உள்ள கறவை மாடுகளின் வெப்ப அயற்சியின் தாக்கத்தினால் தீவனம் உண்பதில் நாட்டம் குறையும். இதனால் கருவில் வளரும் கன்று வளர்ச்சிக்கு தேவையான அளவு ஊட்டச்சத்து கிடைக்காமல் ஆரோக்கியமான கன்று ஈனுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கோடை காலத்தில் கறவை மாடுகளுக்கு கோமாரி, அம்மை, அடைப்பான் போன்ற நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது.

இந்நோய் தாக்குதலில் இருந்து கறவை மாடுகளை பாதுகாக்க கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய தடுப்பூசிகளை போட வேண்டும். கோடை காலத்தில் வறட்சி காரணமாக ஏற்படும் தீவனப் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் ஊறுகாய் புல், உலர்புல் போன்ற பதப்படுத்திய பசுந்தீவனங்களை இருப்பில் வைத்து கறவை மாடுகளுக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.