மிக்ஜாம் புயல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட பார்முலா-4 கார் பந்தயம் 15, 16ம் தேதி நடக்கும்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: மிக்ஜாம் புயல், வெள்ளம் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட பார்முலா 4 கார் பந்தயத்தை வரும் 15, 16ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை தீவுத் திடலை சுற்றி டிசம்பர் 9, 10 தேதிகளில் தெற்காசியாவில் முதன்முறையாக இரவு நேர தெரு பந்தயமாக பார்முலா-4 கார் பந்தயம் நடத்தப்படவுள்ளது. இந்த நிலையில், கார் பந்தயத்திற்கு தடை விதிக்க கோரி மருத்துவர் ஸ்ரீஹரிஷ், லூயிஸ் ராஜ், டிஎன்பிஎஸ்சி முன்னாள் உறுப்பினர் பாலுசாமி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, வரும் 9,10 தேதிகளில் நடத்த திட்டமிட்டிருந்த கார் பந்தயம், மிக்ஜாம் புயல், மழை, வெள்ள பாதிப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அந்த பந்தயத்தை வரும் 15, 16ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பந்தயத்தை நடத்துவதற்கான பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டது. டிக்கெட் விற்பனையும் தொடங்கிவிட்டது என்று கூறி பந்தயம் நடத்தும் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 11ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Related posts

குமரி கடலில் குளிக்க தடை நீடிக்கிறது..!!

துபாய் நாட்டில் மண்ணிட்டு மூடிய குப்பே மேட்டால் துர்நாற்றம் இல்லை; சுகாதாரக் மேடு இல்லை : கவிஞர் வைரமுத்து ட்வீட்

இத்தாலியில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு