திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம்: 100க்கும் மேற்பட்டோர் கைது

துரைப்பாக்கம்: திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் இன்று போராட்டம் நடத்தியது. இது தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி இயங்கி வருகிறது. ஒன்றிய அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரியில் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் பயின்று வருகின்றனர். நடன கல்லூரி என்பதால் கல்லூரியில் ‘இசைக்கு ஏற்றப்படி நடன அசைவுகள்’ கற்று தரப்படுகிறது. பல நேரங்களில் மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி என்ற பெயரில் பேராசிரியர் ஹரிபத்மன் மற்றும் உதவி நடன கலைஞர்களான சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், நாத் ஆகியோர் பாலியல் தொந்தரவு செய்வதாக மாணவிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், கல்லூரி நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுக்காததால் மாணவிகள், சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். இதை தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா, கலாஷேத்ரா கல்லூரிக்கு நேரில் வந்து மாணவிகளிடம் பொது வெளியில் விசாரணை நடத்தினார்.

அப்போது, பேராசிரியர்கள் உள்பட 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மாணவிகளின் கோரிக்கையை தேசிய மகளிர் ஆணைய தலைவர் உதாசீனப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து 4 பேரை கைது செய்ய கோரி கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி விசாரணை நடத்தினார். இதையடுத்து கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி பேராசிரியர் ஹரிபத்மன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், மாணவிகளுடன் கலாச்சார விழாவுக்கு ஐதராபாத் சென்று இருந்த பேராசிரியர் ஹரிபத்மனுக்கு நேரில் ஆஜராக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் ஆஜராவதாக உறுதியளித்து இருந்தார். ஆனால், கடந்த 2ம் தேதி அதிகாலை ஐதராபாத்தில் இருந்து ரயில் மூலம் வந்த பேராசிரியர் ஹரிபத்மன் ரயில் நிலையத்தில் இறங்க வில்லை. செல்போனில் தொடர்பு கொண்ட போது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

தீவிர விசாரணையில், மாதவரம் பகுதியை சேர்ந்த பெண் தோழி ஒருவரின் வீட்டில் பதுங்கியிருந்த ஹரிபத்மனை கைது செய்தனர். பின்னர் அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பாலியல் தொல்லை குறித்த புகாரை தேர்வு முடிவதற்கு முன்பாக விரைந்து முடிக்க கோரியும் ஹரிபத்மனுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் வலியுறுத்தி மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இன்று கலாஷேத்ரா கல்லூரி நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, திருவான்மியூர் உதவி கமிஷனர் சுதர்சன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அறிவித்தபடி இன்று காலையில் இந்த 3 சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திருவான்மியூர் எல்.பி. சாலையில் இருந்து ஆர்ப்பாட்டம் செய்வதற்காக பேரணியாக கலாஷேத்ரா நோக்கி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தை அடைத்தனர். இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க செயலாளர் சுகந்தி கூறுகையில், ‘ஒன்றிய அரசின் கலாச்சார துறையின் கீழ் இயங்கும் கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 30ம் தேதி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். உடனே தேசிய மகளிர் ஆணையம், விசாரணையை தொடங்கியது. ஏதோ நிர்பந்தம் காரணமாக அந்த ஆணையம், விசாரணையை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இந்நிலையில் மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி பேராசிரியர் ஹரிபத்மனை கைது செய்தது. இதற்கிடையில், புகார் கொடுத்த மாணவிகளை கல்லூரி நிர்வாகம் தனித்தனியாக அழைத்து மிரட்டியது கண்டிக்கத்தக்கது. அதே நேரத்தில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கல்லூரி நிர்வாகம் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர், மாணவிகளை தனித்தனியாக அழைத்து விசாரணை என்ற பெயரில் மிரட்டி வருகிறது. தற்போது கல்லூரியில் தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வு முடிவதற்கு முன்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related posts

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாக வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

செல்போன் பறிப்பை தடுத்த வடமாநில வாலிபர் கொலை: திருப்பூரில் தொழிலாளர்கள் போராட்டம்

கூட்டுறவு வங்கிகள் மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ.43,000 கோடி நகை கடன் வழங்க இலக்கு: சுய உதவி குழுக்களுக்கு ₹5,100 கோடி கடனுதவி