திருமணங்களில் ஜாதகப் பொருத்தம்!

சில நாட்களுக்கு முன்னர் ஒரு பிரபலமான ஜோதிடர் திருமணப் பொருத்தங்கள் பற்றியும், செவ்வாய்தோஷம், ராகு தோஷம், கேது தோஷம் பற்றியும் பொதுமேடையில் ஒரு கருத்து தெரிவித்திருந்தார். அந்தக் கருத்து வரவேற்கத்தக்கது. அதில் அவர் திருமணப் பொருத்தங்கள் பற்றிய தவறான, காலத்துக்கு பொருந்தாத கருத்துக்களால், பல நல்ல திருமணங்கள் நின்று விடுகின்றன என்றார். இதை நாம் கண்கூடாகக் பார்க்கிறோம். குறிப்பாக இன்றைக்கு ஆண்களுக்கு, திருமணத்திற்கு பெண் பார்ப்பது என்பது கடினமாகவும், சவாலான விஷயமாகவும் இருக்கிறது.

மணமகன் வீட்டார் பொருத்தமாக இருக்கிறது என்று சொல்லி ஜாதகம் பெற்றுச் செல்லும் மணமகள் வீட்டார், அவர்களுக்கு உரிய ஜோதிடர்களிடம் காட்டி ‘‘பொருத்தம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்’’ என்று நிராகரித்து விடுகிறார்கள்.

‘‘என்ன பொருத்தம் இல்லை?’’ என்று கேட்டால், ‘‘அதெல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் ஜோதிடர் சொல்லிவிட்டார். அவரைக் கேட்காமல் நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம்’’ என்று சொல்லி விடுகிறார்கள். இதில் இரண்டு சிக்கல்கள் இருக்கின்றன. ஜோதிட சாஸ்திரத்தை நம்புபவர்களுக்குக் கூட, ஏன் இரண்டு ஜோதிடர்கள் இரண்டு விதமான கருத்து தெரிவித்தார்கள் என்கின்ற சந்தேகம் வந்துவிடுகிறது.

“இந்த ஜோதிடர்களே இப்படித்தான்” என்கின்ற அவநம்பிக்கையும் வந்துவிடுகிறது. ஆனால், இதன் பின்னணிகள் ஜோதிட சாஸ்திரத்தை மீறிய சில விஷயங்கள் இருப்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. ஏதோ ஒரு காரணத்தினால், நமக்கு பையன் பிடிக்கவில்லை அல்லது பெண் பிடிக்கவில்லை என்பதை நாசுக்காக சொல்வதற்கு, ஜோதிட சாஸ்திரத்தின் தலையில் கை வைத்துவிடுகிறார்கள்.

இதற்கு திருமணப் பொருத்தம் பார்க்காமலேயே நன்கு விசாரித்து, ஒருவருக்கொருவர் கலந்து பேசி, புரிந்து கொண்டு ஒரு முடிவுக்கு வரலாம். ஒரு திருமண வாழ்க்கை என்பது வெற்றியடைவதோ, தோல்வி அடைவதோ திருமணப் பொருத்தம் பார்த்து ஜாதகத்தை சேர்ப்பதலோ, நிராகரிப்பதாலோ மட்டும் நடந்து விடுவதில்லை. இன்னும் நுட்பமாக நாம் ஆராய்ந்து பார்த்தால், ஜாதகத்தில் திருமணப் பொருத்தம் பார்த்து வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்பது பிற்காலத்தில் வந்ததுதான்.

அதுவும் மற்ற விஷயங்களை வைத்துக் கொண்டு, ஒரு பெண்ணையோ மாப்பிள்ளையோ தேர்ந்தெடுப்பதற்கு ஜாதகம் உதவுமா என்பதை ஆராய்ந்து கட்டமைக்கப்பட்ட சில குறிப்புகள்தான் பின்னால் திருமணப் பொருத்தங்கள் பார்ப்பது என்கிற விஷயமாக விரிந்துவிட்டதாகத் தோன்றுகிறது. இடைக்காலத்தில், சொல்லப் போனால் 60 அல்லது 70 வருடங்களில் ஒரு பெண்ணையோ மாப்பிள்ளையோ தேர்ந்தெடுக்க பின்பற்ற வேண்டிய பல விஷயங்களில் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதும் ஒன்று என்றாகிவிட்டது.

என்னுடைய தந்தையின் ஜாதகம் இல்லை.தாயாரின் ஜாதகமும் இல்லை. அது போல் பல குடும்பங்களில் ஜாதகங்கள் இல்லை. பலருக்கு பிறந்த தேதி வருடமே தெரியவில்லை. கொஞ்சம் வசதியான குடும்பங்களில் மட்டும் குறித்து வைத்திருக்கிறார்கள். எனவே 70,80 வாரங்களுக்கு முன் திருமணப் பொருத்தம் பார்ப்பது ஒரு பெரிய விஷயமாகக் கருதப்படவில்லை. நாம் இதை ஆய்வு கண்ணோட்டத்தோடு பார்த்தால் பல உண்மைகள் இதிலே விளங்கும். அதில் உள்ள மாயைகளும் பொய்ம்மைகளும் விலகும்.

திருமணங்களில் நாம் நேரில் பார்த்து, நண்பர்களிடமும் உறவினர்களுடன் விசாரித்து, ஊரிலும் விசாரித்து, கலந்து பேசி,மணமகனைப் பற்றியோ மணமகளைப் பற்றியோ தெரிந்துகொள்ள முடியாத பல விஷயங்களை, ஒருவருடைய ஜாதகத்தைப் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்; அதை வைத்து வரனை ஏற்றுக்கொள்ள முடியும் அல்லது நிராகரிக்க முடியும் என்பது கொஞ்சம் சிக்கலான விஷயம்தான். காரணம், ஒருவர் முரட்டு சுபாவம் கொண்டவர், உணர்ச்சி வசப்படுபவர் என்பது ஜாதகத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்று சொன்னால், நீங்கள் நேரில் விசாரிக்கும் போது கிடைக்கும் தகவல்கள் அப்படித்தான் இருக்கும். இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அது அந்த நபருடைய ஜாதகம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.

ஜாதகத்தின்படி அவர் கோபப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுபவர், எளிதில் உணர்ச்சி வசப்படுபவர், திடீர் திடீர் என்று மனம் போனபடி முடி வெடுப்பவர் என்பது தெரியவந்த பிறகு, நேரில் நீங்கள் நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் விசாரிக்கின்ற பொழுது, ‘‘அப்படி எல்லாம் இல்லை, அவர் தங்கமானவர். அதிர்ந்து பேசமாட்டார். நிதானமாக முடிவு எடுப்பார். யாரிடமும் வார்த்தைகளைக் கொட்டமாட்டார்” என்று தெரிய வந்தால் நீங்கள் எதை நம்புவீர்கள்? ஆனால் இப்படி இருப்பதற்குக் காரணம் ஜோதிட சாஸ்திரம் அல்ல. அது உண்மையைத்தான் கூறும். ஆனால் கொடுக்கப்பட்ட ஜாதகம் தவறாக இருப்பதற்கு வாய்ப்பு
இருக்கிறது அல்லவா.

இப்பொழுது அதிக மதிப்பெண் தரவேண்டியது பிரத்யட்சமாக தெரிகின்ற நம்முடைய நேரடி விசாரிப்புகளையா? அல்லது 12 கட்டங்களைப் பார்த்து சொல்லுகின்ற ஜோதிட சாஸ்திரத்தையா? இந்த இடத்தில் ஜோதிடர் பொய்யை கூறுகிறார் என்று சொல்ல வரவில்லை. காரணம், அவர் ஆளைப் பார்த்து கூறவில்லை. கட்டங்களை பார்த்து என்ன சாஸ்திர விதிகளோ, அதை அனுசரித்துத் தான் கூறுகிறார் இதற்கு ஒரு எளிமையான உதாரணத்தை நான் கூறுகின்றேன். 15 வருடங்களுக்கு முன்னால் ஒரு ரத்த பரிசோதனை நிலையத்தில் நடந்தது. இரண்டு நபர்கள் தங்களுடைய ரத்தத்தைக் கொடுத்து விட்டு சென்று விட்டனர்.

அடுத்த நாள் ரிப்போர்ட் வாங்குவதற்காக சென்ற முதல் நபர் பதறிப்போனார். அவருடைய சர்க்கரை அளவு 400 மில்லி கிராமுக்கு மேல் இருந்தது. கிரியேட்டின் அளவு 5.6 என்று இருந்தது.ரிப்போர்ட்டை பார்த்துவிட்டு அங்கே உள்ள ஒருவர் ‘‘சார், நீங்க உடனடியாக ஒரு நல்ல மருத்துவரை பாருங் கள். உங்களுக்கு சிறுநீரகத்தில் ஏதோ பிரச்சனை போல் தெரிகிறது’’ என்றதும் இவர் பயந்துவிட்டார். ஏதோ பிரச்னை இருக்கிறதோ என்று குழம்பினார். அப்பொழுது இன்னொரு நபர் வந்தார். அவர் தன்னுடைய ரிப்போர்ட்டை வாங்கிவிட்டுச் சொன்னார். ‘‘என்ன என் ரிப்போர்ட்தானா? ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு எல்லாமே நார்மலாக இருக்கிறது. எனக்கு இதுவரை இப்படி சுகர் அளவு குறைந்ததே கிடையாது’’ என்றார்.

அப்பொழுதுதான் தெரிந்தது. இருவரும் ஒரேநேரத்தில் ரத்த மாதிரிகளைக் கொடுக்கின்ற பொழுது, ஏதோ ஒரு சிறு தவறு நடந்திருக்கிறது. மாதிரிகளில் பெயர் மாற்றி ஓட்டப்பட்டு இருப்பது தெரிந்தது. இதே தான் ஜாதகத்திலும் நடக்க வாய்ப்பு உள்ளது. பிறந்த நேரம், கிரகநிலைகள் (பாகைகள் சுத்தமாக) எழுதுவதில் சிறு பிழைகள் ஏற் பட்டி ருந்தால், பலன்கள் எல்லாம் தலைகீழாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

ஜாதகத்தில் பிறந்த நேரத்தை சரி செய்கின்ற நுட்பமான கணக்குகள் இருக்கின்றன. ஆனால் அதை எல்லாம் போட்டுப்பார்த்து பொறுமையோடு பலன் சொல்லக்கூடியவர்கள் யார்? இந்த சிக்கல்களை எல்லாம், இரண்டு ஜாதகங்களை ஜாதக பொருத்தம் பார்த்து, வரனை ஜாதக அடைப்படையில் மட்டும் நிர்ணயிக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் சில விஷயங்கள் இருக்கின்றன. அவை என்ன என்று பார்ப்போம்.

தொகுப்பு: தேஜஸ்வி

Related posts

எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!

குருவும் திருவும்

திருவைகுந்த விண்ணகரம் வைகுந்தநாதப் பெருமாள்