வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலில் 2 மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு திருமணம்: அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்பு

அம்பத்தூர்: சென்னை வில்லிவாக்கத்தில் மிகப் பழமையான அகத்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இக்கோயிலில் இன்று காலை அறநிலையத்துறை சார்பில் 2 மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. பின்னர் 2 மணமகளுக்கும் அரசு சார்பில் தலா 4 கிராம் தங்க தாலி மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சென்னை மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் கி.ரேணுகாதேவி, கொளத்தூர் துணை ஆணையர் சி.சக்திவேல், உதவி ஆணையர் எம்.பாஸ்கரன், காவல்துறை உதவி ஆணையர் ராகவேந்திரன் கே.ரவி, மாவட்ட அறங்காவலர் உறுப்பினர் சாவித்திரி, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளையின் தலைவர் சிம்மசந்திரன், கோயில் செயல் அலுவலர்கள் அ.குமரேசன், பாரதிராஜா உள்பட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுரைப்படி, அனைத்து திருக்கோயில்களிலும் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்துதல், தேர்கள், திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் உள்பட பல்வேறு பணிகளை அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது.

மேலும், நடப்பாண்டு அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், திருக்கோயில்களில் திருமணம் செய்யும் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 கிராம் தங்க தாலி மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை, கோயம்பேடு, குறுங்காலீஸ்வரர் திருக்கோயில்களில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளின் திருமணத்தில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று, மணமகளுக்கு 4 கிராம் தங்க தாலி மற்றும் சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தியுள்ளார். திருக்கோயில்கள் மூலமாக இதுவரை 100 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

போரெல், ஸ்டப்ஸ் அதிரடி அரை சதம் லக்னோவை வீழ்த்தியது டெல்லி

சிறுமியின் காதலை கண்டித்த தாயின் காதலன் கொலை: வயிற்றில் சொருகிய கத்தியை பிடுங்கி பதிலுக்கு வெட்டியதில் வாலிபர் சீரியஸ்

சேலம் பெண்கள் சிறையில் முதன்முறையாக பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற பெண் கைதி: பரிசு வழங்கி அதிகாரிகள் பாராட்டு