மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி; மீனாட்சியம்மன்-சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பரங்களில் வீதியுலா: பொதுமக்களுக்கு படியளந்தார் இறைவன்

மதுரை: மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு, மதுரையில் இன்று காலை மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பரங்களில் வீதியுலா வந்து பொதுமக்களுக்கு படியளந்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி தினத்தில் அனைத்து உயிர்களுக்கும் இறைவன் படியளக்கிறார். அன்றைய தினத்தில் சிவபெருமானை வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்கும்; பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்பது ஐதீகம். இதன்படி மதுரையில் மீனாட்சியம்மன்-சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர வீதியுலா இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை மீனாட்சியம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து காலை 6.15 மணிக்கு கோவிலில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரரும் மற்றும் மீனாட்சி அம்மனும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி புறப்பட்டு வந்தனர். பின்னர் கீழமாசி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த 2 சப்பரங்களில் சுவாமி-அம்பாள் தனித்தனியாக எழுந்தருளினார். அதை தொடர்ந்து ஹர ஹர சங்கர… சிவ சிவ சங்கர… என்ற முழக்கத்துடன் பக்தர்கள் அஷ்டமி சப்பர தேரை வடம் பிடித்து இழுத்தனர். அனைத்து உயிர்களுக்கும் இறைவன் படியளப்பதை நினைவு கூரும் வகையில், அஷ்டமி சப்பரங்கள் புறப்பாட்டின்போது கோவில் நிலத்தில் விளைந்த நெல், அரிசி ஆகியற்றை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

பெண்கள் மட்டும்
மீனாட்சியம்மன் எழுந்தருளிய தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து சென்றனர். நகரில் உள்ள யானைக்கல், விளக்குத்தூண் சந்திப்பு, கீழவாசல், கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி, தவிட்டுச் சந்தை, தெற்குவாசல், கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, பெரியார் பஸ்நிலையம், ரயில்நிலையம், மேலவெளி வீதி, குட்ஷெட் ரோடு, வக்கீல் புதுத்தெரு வழியாக அஷ்டமி சப்பர தேரோட்டம் நடைபெற்றது. நகர்வலம் வந்த மீனாட்சியம்மன், பிரியாவிடை சுந்தரேஸ்வரரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி திதியில் அனைத்து உயிர்களுக்கும் இறைவன் படியளப்பதால், இன்றைய தினத்தில் ஈசனை வழிபட்டு, கைப்பிடி அரிசியாவது தானம் வழங்க வேண்டும் என்கின்றனர்.

Related posts

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்வரலாற்று வெற்றிக்காக முழு பலத்துடன் களம் இறங்கிய திமுக: தோல்வி பயத்தில் ஒதுங்கியதா அதிமுக? பாஜவுக்கு பலமில்லாததால் பாமக போட்டி

சென்னை மணலி புதுநகர் அருகே தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் குடோனில் தீ விபத்து

பெண் போலீசாருக்கு தேவையான வசதிகள் செய்வதில் தமிழ்நாடு காவல்துறை முன்னிலையில் உள்ளது: டிஜிபி சங்கர்ஜிவால் பெருமிதம்